திரைப்பாடல்- அழகும் ஆழமும்- 19: 18. மனதைக் குளிர்விக்கும் மழை நீர்..!

அழகு தமிழ் - எப்படி இருக்கும்..? குற்றால அருவியில் குளித்தது போல் இருக்குமா...? கடலோர அலைகளில் களித்தது போல் இருக்குமா...? குளத்து நீரில்கால் நனைத்தது போல் இருக்குமா...? ஆற்றங் கரையில் அணைத்தது போல் இருக்குமா..? அழகு தமிழ் - துள்ளிக் குதித்து வரும் மலர்த் தென்றலாய், பாடும் போதும் கேட்கும் போதும் மனதை வருடிச் செல்லும்.

 

ஓர் இளம் பெண். உடன் ஓர் இளைஞன். அவன் - கொள்கைப் பிடிப்பு கொண்ட அப்பழுக்கற்ற  நேர்மையாளன். ஊர் மொத்தமும் அவனைத் தம் வீட்டுப் பிள்ளையாய், 
தலைவனாய் தெய்வமாய் ஆராதிக்கிறது. இவளோ... நாலு வீதி சுற்றி வந்து இளநீர் விற்றுப் பிழைப்பு நடத்துகிறவள். சாமான்ய குடும்பத்தைச் சேர்ந்த கடைக்கோடி குடிமகள். ஆனால்... லட்சியத்தில், குறிக்கோளில் தன்னலம் கருதாது உழைக்கிற ஆற்றல் கொண்டவள். போர் வீரனின் துணிச்சல், இந்தப் பெண்ணின் பிறவிக் குணம். கருணை - அவளது முகவரி. கடமை - அவளது மூச்சு.

அவனும் அவளும் சரியான இணை. இரு பெரும் நதிகள் இணைந்தது போன்றது அது. தொடர்ந்து பல பத்தாண்டுகளுக்கு மக்களுக்கு வாரி வழங்குவதற்கு இரு பெரும் தலைமைகள் சேர்ந்து பணியாற்றுகிற வாய்ப்பின் தொடக்கப் புள்ளியில், தோற்றுவாயில் நின்று கொண்டு பாடுகிறாள் அவள். வான் மழை இறங்கி வந்து வாழ்த்துகிறது. நிலம் குளிர்ந்தது. வஞ்சியின் இதயமும்தான். அருவியாய்க் கொட்டுகிற வார்த்தைகளுக்கு ஈடுகொடுத்து ஆடுகிறாள்; ஒவ்வொரு அசைவிலும் ஆனந்தம். அசைக்க முடியாத நம்பிக்கை. அதுதானே அவளின் இயல்பு...?

 

1969இல் வெளிவந்த படம் நம்நாடு.அழகான தோற்றத்தில் பொது நலனுக்காக உழைக்கும் 'வாத்தியார்' என்ன நடந்தாலும் உடனிருந்து போராட முன் வரும் குடிசைப்பெண். 
எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா இணைந்து நடித்து கலக்கிய படம். 'வாங்கய்யா... வாத்தியார் ஐயா...' 'நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே..' 'நினைத்ததை நடத்தியே முடித்தவன்...' ஆகிய பாடல்கள் பிரபலம் ஆயின. ஆனாலும், இந்தப் பாடல் காட்சியில் வெளிப்படும் நளினம் - ஒரு தனி அழகு.

பாடியவர் - பி. சுசீலா. இசை: எம்.எஸ். விஸ்வநாதன். கவிஞர் வாலி எழுதிய வரிகள் இதோ: 

ஆடை முழுதும் நனைய நனைய மழை அடிக்குதடி.
நெஞ்சில் ஆசை வெள்ளம் வழிய வழிய அலை அடிக்குதடி. 
நீல விழிகள் மயங்கி மயங்கி கதை படிக்குதடி 
புது நினைவு வந்து மனதில் நின்று குரல் கொடுக்குதடி... 

கன்னம் கண்ணாடி காதலன் பார்க்க 
கைகள் பூமாலை தோளினில் சேர்க்க
கண்கள் பூஞ்சோலை மன்னவன் ஆட 
நெஞ்சம் பூமஞ்சம் தேன் தவழ்ந்தோட 

பொங்குது பொங்குது எண்ணக் கனவுகள் 
சொல்லுது சொல்லுது அன்புக் கவிதைகள்... 

புண்ணியம் செய்தேனே நான் உனை அடைய 
புன்னகை புரிந்தாயே பூமுகம் மலர 
தன்னலம் கருதாத தலைவாநீ வாழ்க 
பொன்னைப் போல் உடல் கொண்ட அழகே நீ வருக.
 
உள்ளமும் எண்ணமும் உன்னிடம் வந்தது 
அச்சமும் வெட்கமும் என்னுடன் நின்றது.
 
மல்லிகை மலராடும் மங்கள மேடை 
மங்கை மணமாலை சூடிடும் வேளை 
இல்லறம் உருவாகும் நாள் வரும் போது 
இன்பத்தை எடுத்துரைக்க வார்த்தைகள் ஏது...
 
சந்தனம் குங்குமம் நெற்றி நிறைந்திடும்
கண்களும் நெஞ்சமும் ஒன்று கலந்திடும்... 

ஆடை முழுதும் நனைய நனைய மழை அடிக்குதடி...

(வளரும்.

 
- பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி.

இதையும் படியுங்கள்:-

1.ஔவையாருக்கு கே.பி.சுந்தராம்பாள்... அகத்தியருக்கு சீர்காழி கோவிந்தராஜன்..!

2.வாழ்க்கையில் எத்தனையோ வழிகள்... பழக்கத்தை விட்டு விடலாம்... பாசத்தை விட முடியுமா..?

3.கட்டாயத் திருமணத்தை முறியடிக்க பகீர் திட்டம்... வீட்டிற்குள் நுழைந்த வளையல்காரன்..!