திரைப்பாடல் - அழகும் ஆழமும்.-18: இசை அரசியின் இனிய சாம்ராஜ்யம்..! 

அது - இந்தியா சுதந்திரம் பெறாத காலம். தமிழ்த் திரையுலகம் தவழத் தொடங்கிய பருவம். இசையிலும் இலக்கியத்திலும் கோலோச்சிய ஜாம்பவான்கள், தமிழ்த் திரையை, சமூகத்தில் தேசபக்தியைப் பரப்புவதற்கான சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். எல்லிஸ் ஆர். டங்கன் - திரைப்பட இயக்குநர். ஆரம்ப காலத்தில், தரமான படங்களைத் தந்து, தமிழ்த் திரைப்படங்களுக்கு உயிர் ஊட்டியவர். டி. சதாசிவம் - சுதந்திரப் போராட்டத் தியாகி; கல்கி வாரப் பத்திரிகையை நிறுவிய பத்திரிகையாளர்; மீரா படத் தயாரிப்பாளர்.

 

இசை அமைப்பாளர் - எஸ்.வி.வெங்கட்ராமன். (சோழவந்தான் வரதராஜன் வெங்கட்ராமன்) தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பல மொழிகளில் 200க்கு மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்தவர். மனோகரா, இரும்புத் திரை ஆகியன இவர் இசை அமைத்தவை. அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, என்.டி.ராமராவ் ஆகிய ஐந்து, பின்னாள் முதல்வர்களுடன் பணியாற்றியவர். எம்.எஸ். பாடிய 'பஜகோவிந்தம், இவரது இசை அமைப்பில் மலர்ந்ததுதான்.   

தனது எழுத்தால் பத்திரிகைத் துறையில் புது ரச்சம் பாய்ச்சியவர் 'சரித்திரப் புகழ்' பெற்ற மாபெரும் படைப்பாளி - அமரர் கல்கி. இன்றளவும் மிகப் பெரும் எண்ணிக்கையில் விற்று தலைமுறைகள் தாண்டியும் சாதனைகள் படைத்து வரும் - பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம். பார்த்திபன் கனவு - உள்ளிட்ட காவியங்கள் தந்து, தற்காலத் தமிழ் இலக்கியத்தை இமயம் அளவுக்கு உயர்த்தியவர்.

 

நிறைவாக, இசை அரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி. (மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி) ஐக்கிய நாடுகள் சபையில் (1966) பாடியவர்; ராமோன் மெக்சேசே (Ramon Magsaysay) விருது பெற்றவர்; பாரத ரத்னா வழங்கப்பட்ட ஒரே இசை விற்பன்னர். இந்தியத் திருநாட்டின் கலாச்சார அடையாளமாக உலகம் முழுதும் அறியப்படுகிற இசை மேதை.  
   
இத்தனை ஜாம்பவான்கள் ஒரே படத்தில்..! அதுதான் 1945இல் வெளியான - 'மீரா'. படத்தின் டைட்டில் கார்டு, இப்படிக் கூறுகிறது -  ஸ்ரீமதி எம்.எஸ். சுப்புலக்ஷ்மி நடிக்கும் மீரா. 75 ஆண்டுகளுக்கு முன்பே, தமிழ்த் திரையில், மகளிர் பெயரை முன் நிறுத்திய சாதனைப் பெண்மணி - எம்.எஸ். உலகம் முழுதும் உருகி உருகிக் கேட்ட கந்தர்வக் குரல். என்றைக்கும் மறையாது, காற்றினிலே கரைந்து வருகிற அவரது கீதம்... அமரர் கல்கி எழுதிய பாடல் வரிகள்.. இதோ:   

காற்றினிலே வரும் கீதம்  
கண்கள் பனித்திடப் பொங்கும் கீதம்
கல்லும் கனியும் கீதம்  
காற்றினிலே வரும் கீதம்

பட்டமரங்கள் தளிர்க்கும் கீதம் 
பண்ணொலி கொஞ்சிடும் கீதம்
காட்டு விலங்கும் கேட்டே மயங்கும் 
மதுர மோஹன கீதம்
நெஞ்சினிலே...
 
நெஞ்சினில் இன்ப கனலை எழுப்பி 
நினைவழிக்கும் கீதம் 
காற்றினிலே வரும் கீதம்

சுனை வண்டுடன் சோலைக் குயிலும் மனம் குவிந்திடவும்
வானவெளிதனில் தாராகணங்கள் தயங்கி நின்றிடவும்
ஆ.... என் சொல்வேன் மாயப்பிள்ளை வேய்ங் குழல்பொழி கீதம் 
காற்றினிலே வரும் கீதம்.. காற்றினிலே வரும் கீதம் 

நிலா மலர்ந்த இரவினில், தென்றல் உலாவிடும் நதியில் 
நீல நிறத்துப் பாலகன் ஒருவன் குழல் ஊதி நின்றான் 
காலமெல்லாம்... காலமெல்லாம் அவன் காதலை எண்ணி 
உருகுமோ என் உள்ளம்... 

காற்றினிலே வரும் கீதம்... காற்றினிலே வரும் கீதம் 
காற்றினிலே...

 

வளரும்...

 
- பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி. 

இதையும் படியுங்கள்:-

1.ஔவையாருக்கு கே.பி.சுந்தராம்பாள்... அகத்தியருக்கு சீர்காழி கோவிந்தராஜன்..!

2.அனுதினம் செய்வார் மோடி அகமகிழ்வார் போராடி..!

3.வாழ்க்கையில் எத்தனையோ வழிகள்... பழக்கத்தை விட்டு விடலாம்... பாசத்தை விட முடியுமா..?