நடிகரை கரம் பிடிக்கும் நமீதா... வீடியோ மூலம் உறுதி செய்தார்!
மச்சான்ஸ்... என்கிற ஒற்றை வார்த்தையால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர் நடிகை நமிதா. 35 வயதைக் கடந்தும் திருமணம் ஆகாமல் இருந்த இவர் தற்போது தன்னுடைய திருமண தேதியை அறிவித்துள்ளார்.
இவருடைய திருமணம் நவம்பர் 24 ஆம் தேதி நடைபெற உள்ளது. மேலும் இவர் மியா திரைப்படத்தில், இவருக்கு ஜோடியாக நடித்த வீரா என்கிற நடிகரைத் தான் கரம்பிடிக்க உள்ளார்.
இந்த அறிவிப்பை தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து ஒரு வீடியோ பதிவாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
2002 ஆம் ஆண்டு தெலுங்கில் சொந்தம் என்கிற திரைப்படம் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்த நமீதா, தமிழில் 2004 ஆம் ஆண்டு 'எங்கள் அண்ணா படம் மூலம் அறிமுகமானார். தமிழில் இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார்.
ஆனால் இவர் உடல் எடை திடீர் என கூடியதால் பட வாய்ப்புகள் குறைந்து போனது. இதனால் இவர் சின்னத்திரையில் நடன நிகழ்ச்சிகளுக்கு நடுவராக மாறினார். தொடர்ந்து 14 ஆண்டுகளுக்கு மேல் திரையுலகில் ஜொலித்து வரும் நமிதா, திருமண செய்தியை அறிவித்துள்ளது பல ரசிகர்களுக்கும் சிறு வருத்தத்தைக் கொடுத்தாலும்... பலர் அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.