மிகவும் சைலண்டாக படப்பிடிப்பு நடத்தப்பட்ட ‘ஆதித்ய வர்மா’ அடுத்த மாதம் ரிலீஸாக உள்ள நிலையில் அப்படம் குறித்த சர்ச்சைகள் வரிசையாக கியூ கட்டி நிற்கின்றன.

தெலுங்கின் அர்ஜூன் ரெட்டி பாலா மூலம் வர்மாவாகி, பின்னர் அவர் கழட்டி விடப்பட்டு ’ஆதித்ய வர்மா’ வாக வளர்ந்துவரும் கதை பழங்கதை. இந்நிலையில் படப்பிடிப்பு முடிந்து அடுத்த மாதம் ரிலீஸ் செய்யவிருப்பதாக தயாரிப்பாளர் தரப்பு அறிவித்தவுடன் ‘அதற்குள்ளாக’ எப்படி படத்தை முடித்திருக்க முடியும் என்று சந்தேகித்த படத்தின் முன்னாள் இயக்குநர் பாலா ஒருவேளை தான் ஷூட் பண்ணிய போர்ஷன்களையும் படத்தில் பயன்படுத்தியிருப்பார்களோ என்ற சந்தேகத்தில் விக்ரமுக்கும் தயாரிப்பாளருக்கும் நோட்டீஸ் அனுபியிருப்பதாகத் தகவல்கள் வந்தன.

ஆனால் பாலா நியாயமாக அப்படி ஒரு நோட்டீஸை படத்தின் இயக்குநர் கிரீஷயாவுக்குத்தானே அனுப்பியிருக்கவேண்டும் என்று கேள்வி எழுந்த நிலையில் படம் குறித்த இன்னொரு அதிர்ச்சி செய்தி பூனைக்குட்டி போல் வெளியே வந்திருக்கிறது. மகனின் முதல் படமே இப்படி ஆகிவிட்டதே என்ற பதட்டத்தில் ஆதித்ய வர்மாவின் ஒவ்வொரு அசைவிலும் பங்கெடுக்க ஆரம்பித்த விக்ரம் ஒரு கட்டத்தில் இயக்குநரை ஓரம் கட்டிவிட்டுத் தானே இயக்க ஆரம்பித்துவிட்டாராம். இதற்குத் தோதாகத்தான் அவரது நெருங்கிய நண்பரான ரவி.கே.சந்திரனை ஒளிப்பதிவாளராக நியமித்தாராம் விக்ரம்.

விக்ரம் இயக்கிய போர்சன்களை எடிட்டுக்கு அப்புறம் பார்த்த தயாரிப்பாளர், பாலா விஷயத்தில் அவ்வளவு உணர்ச்சி வசப்பட்டிருக்கவேண்டாம் என மிகத் தாமதமாக உணர்ந்தே அவர் எடுத்த சில காட்சிகளைப் பயன்படுத்த முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. அப்ப கண்டிப்பா நிறைய பஞ்சாயத்து பெண்டிங்ல இருக்கு.