இந்திய சினிமா வரலாற்றில் இதுதான் முதல் சம்பவமாக இருக்கவேண்டும். சுமார் 200 பெண் காவலர்கள், போலீஸ் கமிஷனர் அனுமதியுடன், அதுவும் போலீஸ் துறைக்கு எதிரான ஒரு படத்தை பிரசாத் லேப் தியேட்டரில் பிரிவியூ பார்த்தார்கள். படத்தின் பெயர் ‘மிக மிக அவசரம்’. ‘அமைதிப்படை2’ ‘கங்காரு’ படங்களின் தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி தயாரித்து இயக்கியுள்ள இப்படத்தை இயக்குநர் வெற்றிமாறன் வெளியிடுகிறார். பெண் கான்ஸ்டபிளான நாயகி பிரியங்காவுக்கு உயர் அதிகாரி ஒருவர் தரும் MeToo' பிரச்சனைதான் கதையே. 

காவலர் தினமான நேற்று மஃப்டியில் பிரசாத் லேப் தியேட்டருக்கு வருகை தந்த சுமார் 200 பெண் காவலர்கள் தங்கள் கதையை, காவல்துறையில் தங்களுக்கு நேரும் இன்னல்களை கண்ணீர்மல்க கண்டு ரசித்தார்கள். க்ளைமாக்ஸில் நாயகி ப்ரியங்காவின் மீது ஒரு சொட்டு மழைத்துளி விழுந்ததும் [மன்னிக்கவும் கதையை எழுதமுடியாது] அத்தனை காக்கிச்சட்டை பெண்களும் சிலிர்த்து ஆரவாரம் செய்தார்கள். 

காவல்துறையில் உள்ள குறைகளை, அதிலும் குறிப்பாக ஒரு உயர் அதிகாரி தனக்குக் கீழே பணிபுரியும் பெண்ணுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுக்கும் கதை கொண்ட ஒரு படத்தை, அதுவும் ONDUTY’ யில் எப்படி பிரிவியூ பார்க்க அனுமதித்தார்கள் என்று இயக்குநரைக் கேட்டோம்...

‘பெண் காவலர்களுக்கு இருக்கும் நியாயமான பிரச்சனைகளைத்தான் படம் பேசுகிறது. முதலில் அமைச்சர் செல்லூர் ராஜுவும்,விஜயபாஸ்கரும்  படம் பார்த்தார்கள். அவர்கள் மூலமாக நானும் இயக்குநர் பாரதிராஜாவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சானியை சந்தித்தோம். படம் சொல்லும் சேதியை தெளிவாகப் புரிந்துகொண்ட அவர் கமிஷனருக்குப் பேசி இத்திரையிடல் நடக்க உதவிபுரிந்தார். ஆனால் அதற்கு முன்பு சில போலீஸ் உயரதிகாரிகள் பார்த்தபிறகே பெண் காவலர்களுக்கு திரையிட அனுமதி கிடைத்தது என்றார். நடந்தது மிக மிக அதிசயம்தான்.