சிவகார்த்திகேயன் நடிப்பில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாக உள்ள சீமராஜா படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமை, விஜயின் மெர்சல் படத்தின் விநியோக உரிமையை விட அதிக விலைக்கு விற்பனையாகியுள்ளது. வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய படங்களை இயக்கிய பொன்.ராமுடன் இணைந்து சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் சீமராஜா. இந்த படத்தில் முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் சூரியும் சிவகார்த்திகேயனுடன் இணைந்துள்ளார். சீமராஜா படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த நிலையில் சீமராஜா படத்தின் தமிழக உரிமை ஹாட் கேக்குகள் போல அதிக விலைக்கு விற்பனையாகியுள்ள தகவல் வெளியாகியுள்ளது. சீமராஜா படத்தின் சென்னை விநியோக உரிமையை எஸ்.பி.ஐ சினிமாஸ் பெற்றுள்ளது. இதே போல் செங்கல்பட்டு உரிமையை ஸ்டாலின் மகன் உதயநிதியின் ரெட்ஜெயன்ட் மூவிஸ் பெற்றுள்ளது. தென் ஆர்காடு மற்றும் வட ஆர்காடு உரிமையை இயக்குனர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் கைப்பற்றியுள்ளது. இதே போல் சேலம், திருச்சி, கோவை ஏரியாவும் சீமராஜா படத்தை போட்டி போட்டு வாங்கிச் சென்றுள்ளது.

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்ன என்றால் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படத்தின் விநியோக உரிமை விற்ற தொகையை காட்டிலும் சீமராஜாவின் தமிழக உரிமை அதிக விலைக்கு விற்பனையாகியுள்ளது. அதாவது தற்போது ரஜினி, விஜய், அஜித்துக்கு அடுத்தபடியாக சிவகார்த்திகேயன் படத்தின் விநியோக உரிமை தமிழகத்தில் விற்பனையாகியுள்ளது. அதே சமயம் நடிகர் விஜயின் மெர்சல் அதிக விலைக்கு விற்பனையான கேரளா மற்றும் வெளிநாடுகளில் சிவகார்த்திகேயனின் சீமராஜா அந்த அளவிற்கு விலைபோகவில்லை.