முதல் நான்கு நாட்களின் நல்ல வசூலுக்குப்பின் டல்லடிக்க ஆரம்பித்திருக்கும், மணிரத்னத்தின் ‘செக்கச்சிவந்த வானம்’ படத்துக்கு இரண்டாவது கட்ட இலவச விளம்பரம் கிடைக்க ஆரம்பித்துள்ளது, இம்முறை நம்ம பெண் பத்திரிகையாளர்களால். 

படத்தில் பெண் ஊடகவியலாளராக வரும் நடிகை அதிதி ராவ், நாயகன் அரவிந்த்சாமியின் சின்ன வீடு செட்-அப்பாக வருகிறார். டி.வி.க்கு பேட்டி எடுக்கும் ஒரு காட்சி தவிர மற்ற அனைத்து காட்சிகளிலும் அர்விந்த்சாமியின் படுக்கை அறைப் பாவையாகவே சித்தரிக்கப்பட்ட அவர் அணிந்திருக்கும் காஸ்ட்யூமானது படு பரிதாபத்துக்குரியது. அவர் ஐந்தாவதோ ஆறாவதோ படிக்கும்போது வாங்கியவையோ என்று சந்தேகிக்கும் அளவுக்கு சிறியவை.

செ,சி,வா’ ஒரு கொரியன் படத்தின் அப்பட்டமான காப்பி என்று முழங்கி வந்த முகநூல் போராளிகள் சற்றே டயர்டாக ஆரம்பித்திருக்கும் நிலையில், தற்போது ஒருவர் பின் ஒருவராக பெண் ஊடக போராளிகள் முகநூல், ட்விட்டர் மூலமாக அதிதி மேட்டரை கொஞ்சம் லேட்டாக அடையாளம் கண்டு காண்டாகிக் கொதிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். 

‘தமிழ் ஊடகப்பெண்கள் இவ்வளவு ஆபாசமாகவா ஆடை அணிகிறார்கள்?’  சில தினங்களுக்கு முன் ஊடக பெண்களைக் கொச்சப்படுத்திய எஸ்.வி.சேகருக்கு வக்காலத்து வாங்குவது போல் இருக்கிறது அந்த பாத்திரப் படைப்பு’ என்று போகிறது அந்தக்கொதிப்பு.