புகைபிடித்தபடி டான்ஸ் ஆடுவதுபோன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டதற்காக, நடிகை மந்தனா கரீமியை, ரசிகர்கள் பலரும் கழுவி ஊற்றிவருகின்றனர். மாடலாக இருந்து நடிகையாக மாறியவர் மந்தனா கரீமி. ஈரான் நாட்டை பூர்வீகமாகக் கொண்ட இவர், மான்டி என அன்பாக அழைக்கப்படுகிறார். இந்தியில் ஒளிபரப்பாகும் ‘பிக் பாஸ் 9’ சீசனில் பங்கேற்றதன் மூலமாக, பிரபலமானார். இதன்பிறகு, பாக் ஜான்னி, மெய்ன் ஆர் சார்லஸ், கியா கூல் ஹெய்ன் ஹம் 3 போன்ற படங்களில் மந்தனா நடித்துள்ளார். மந்தனா கரீமி, இரவு நேர கேளிக்கை விருந்துகளுக்குச் செல்வதில் அதிகம் ஆர்வம் கொண்டவர். சமீபத்தில் இரவு விருந்து ஒன்றுக்கு இவர் சென்றுள்ளார். அப்போது, நண்பர்களுடன் புகைபிடித்தபடி ஜாலியாக நடனம் ஆடிய மந்தனா, அதனை வீடியோவாக தொகுத்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். ஆனால், அவர் எதிர்பார்த்ததைவிட அதிக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுபற்றி ரசிகர்கள் பலரும் இன்ஸ்டாகிராமில் காரசாரமாக, மந்தனா கரிமியை வறுத்தெடுத்து வருகின்றனர். பெண்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய நீங்கள் இப்படி செய்யலாமா? புகைபிடிப்பதை ஊக்குவிக்காதீர்கள், என்றும், ஏராளமான பெண்கள் சமூக ஊடகங்களில் வலம்வருகிறார்கள். அவர்களை இப்படிப்பட்ட கீழ்த்தரமான வீடியோ போட்டு திசைதிருப்பாதீர்கள், என்றும் பலர் மந்தனா கரிமியை வசைபாடியுள்ளனர். எனினும், இதைபற்றி மந்தனா பெரிதும் கண்டுகொள்ளவில்லை. எனக்குப் பிடித்ததை செய்கிறேன் எனவும், இதனை பார்த்து கெட்டுப் போவது அவரவர் விருப்பம் எனவும் மந்தனா கரீமி குறிப்பிட்டுள்ளார்.