மக்கள் நீதி மய்யப் பணிகளை சற்றே மந்தப்படுத்திவிட்டு, ஷங்கருடன் மீண்டும் இணையும் ‘இந்தியன்2’ மற்றும் வெகு சில நாட்களே படப்பிடிப்பு நடத்தப்பட்டு ஓய்வாய் உட்கார்ந்திருக்கிற ‘சபாஷ் நாயுடுவையும் தூசி தட்ட கமல் முடிவெடுத்திருப்பதாக மய்யமான சில தகவல்கள் நடமாடுகின்றன.

கமலின் இயக்கத்தில்’சபாஷ் நாயுடு’ 2016ம் ஆண்டு மே மாதம் துவங்கப்பட்டது. இதில் அவருடன் ரம்யா கிருஷ்ணன், மகள் ஷ்ருதிஹாஸன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்து வந்தனர்.

படப்பிடிப்பு துவங்கிய சில நாட்களிலேயே கமலுக்கு ஏற்பட்ட ஒரு குடும்ப விபத்தில் அவருக்கு காலில் பலத்த அடிபடவே படப்பிடிப்பு நின்றுபோனது. அதன்பின்னர் ‘விஸ்வரூபம்2’ வைக் கையில் எடுத்து கன்ஃப்யூஸ் ஆகிக்கொண்டிருந்த கமல், மக்கள் நீதி மய்ய வேலைகளில் பிஸியாக இருந்தார்.

கிராம சபை பஞ்சாயத்து, அரசியல் கூட்டங்கள்,  ஜெயக்குமார் போன்ற  அமைச்சர்கள் சிலருடன் அக்கப்போர் முடிந்து ஆசுவாசமாகக் காணப்படும் கமல்,  தனக்கு மீண்டும் சினிமா மூடு ஸ்டார்ட் ஆயிடுச்சி என்று சொல்லிக்கொள்ள ஆரம்பித்திருக்கிறாராம். இதையொட்டியே மிக விரைவில் ‘இந்தியன்2’ ‘சபாஷ் நாயுடு’வும் தொடங்கவிருக்கிறது.

முன்பு ‘சபாஷ் நாயுடு’ தொடங்கப்பட்ட டைட்டிலில் ஏன் ஜாதிப்பெயர் என்று எதிர்ப்பு கிளம்பியதைக் கண்டும் காணாமல் இருந்த கமல் இம்முறை யாரும் சொல்லாமலே டைட்டிலை மாற்றுவது உறுதியாம்.