‘இந்தியன் 2’படத்தில் தனது போர்ஷன்கள் முடிந்தவுடன் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருப்பதாகவும் அதற்காக பக்தி மார்க்கத்தில் ஈடுபாடுள்ள ஒரு மாப்பிள்ளையை மிகத் தீவிரமாகத் தேடி வருவதாகவும் நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.

2008ம் ஆண்டு வெளியான பாரதிராஜாவின் ‘பொம்மலாட்டம்’படத்தின் மூலம் அறிமுகமானவர் காஜல் அகர்வால். முதல் படம் படுதோல்வி என்றாலும் அடுத்தடுத்த ஹிட்களால் தமிழ்,தெலுங்கு இண்டஸ்ட்ரியில் வலுவான இடத்தைப்பிடித்து இந்த 11 ஆண்டுகளும் முன்னணி நடிகைகள் பட்டியலில் உள்ளார்.தற்போது ‘பாரிஸ் பாரிஸ்’என்ற கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடித்திருக்கிறார். செக்ஸ் காட்சிகள், மற்றும் வசனங்களுக்காக அப்படம் சென்சார் சர்டிபிகேட் கிடைக்காமல் இன்னும் ரிலீஸாகவில்லை.

அடுத்த படியாக ஷங்கர்,கமல் கூட்டணியின் ‘இந்தியன்2’படத்தில் 90 வயதான சேனாதிபதி கமலுக்கு ஜோடியாக 80 வயது பாட்டியாக காஜல் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது.தற்போது 35 வது வயதில் காலடி எடுத்து வைத்திருக்கும் தான் இதுவரை எவருடைய காதல் வலையிலும் விழவில்லை என்று சத்தியம் செய்கிறார். இது தொடர்பாக தெலுங்கு சானல் ஒன்றுக்குப் பேட்டி அளித்திருக்கும் காஜல்,’“நான் விரைவில் திருமணம் செய்து கொள்வேன். அது இந்தியன் 2 படப்பிடிப்பு முடியும் சமயமாகவே கூட இருக்கும். எனக்கு கணவராக வருபவருக்கு சில தகுதிகள் இருக்க வேண்டும். எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. அதுபோல் அவருக்கும் கடவுள் நம்பிக்கை இருக்க வேண்டும். என்னிடம் எப்போதும் அன்பாக இருக்க வேண்டும். அக்கறையோடு என்னை கவனித்துக்கொள்ள வேண்டும். இதுபோன்ற குணம் உள்ளவரை மணப்பேன்.”என்கிறார்.