'இந்தியன் 2 ' படத்தில் தற்போது கமல்ஹாசனுக்கு ஜோடியாக பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார் நடிகை காஜல் அகர்வால்.  மேலும் இரண்டு தமிழ் படங்களும்,  ஒரு தெலுங்கு படமும் அவருடைய கைவசம் உள்ளது.

இந்நிலையில் திரையுலகில் கடந்த 10 ஆண்டுகளாக இருப்பது குறித்து தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.  இது குறித்து அவர் கூறுகையில்... "எந்த துறையில் பணியாற்றினாலும், பெண்களும் தனது வயதைக் கேட்டால் சொல்ல தயங்குவார்கள் . அதிலும் கதாநாயகிகளாக நடித்தால் அவர்கள் பதில் சொல்வதே இல்லை.  ஆனால் நான் அப்படி இல்லை.  எனது உண்மையான வயதை சொல்ல தயங்குவது இல்லை.

நடிகைகள் திரைத்துறையில் தங்களுடைய வயதை குறைத்து காட்டுவதற்காக படாதபாடுபடுகிறார்கள்.  என்னிடம் வயதைக் கேட்டால் இன்னும் 10 ஆண்டுகள் அதிகமாகவே சொல்ல நான் ரெடி.  காரணம் சினிமாவில் நிறைய அனுபவம் எனக்கு கிடைத்துள்ளது.  வேறு எந்த துறையில் இருந்தாலும் இவ்வளவு கிடைத்திருக்காது. திறமையான நடிகர்களுடன் சேர்ந்து பயணிக்கும் வாய்ப்பை பெற்றேன்,  எத்தனையோ புதிய விஷயங்கள் தெரிய வந்துள்ளது.  இப்போது நான் ரொம்ப முதிர்ச்சியாகி இருக்கிறேன். 

எந்த பிரச்சினை வந்தாலும்,  அதற்கு என்னிடம் தீர்வு இருக்கிறது. யார் எந்த பிரச்சனையை சொன்னாலும் யோசித்து முடிவு சொல்லிவிடுகிறேன். 10 ஆண்டு சினிமா வாழ்க்கையில் 30 ஆண்டு அனுபவத்தை எனக்கு தேடிக் கொடுத்திருக்கிறது.  அதனால் வயதைப் பற்றி நான் கவலைப்பட மாட்டேன் என காஜல் அகர்வால் கூறியுள்ளார்".