“தலைவா” படத்தில் நடிக்கும் போது அந்த படத்தின் இயக்குநர் ஏ.எல்.விஜய்க்கும், நடிகை அமலா பாலுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இருவரும், கருத்து வேறுபாடு காரணமாக  2017ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். 

அதன் பின்னர் சினிமாவில் முழு கவனம் செலுத்தி வந்த அமலா பால் மும்பையைச் சேர்ந்த பாடகர் ஒருவரை காதலிப்பதாகவும், அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகின. இருதினங்களுக்கு முன்பு பாடகர் பவ்னிந்தர் சிங்குக்கும், அமலா பாலுக்கும் ரகசிய திருமணம் நடைபெற்றதாக கூறப்பட்டது. 


இந்நிலையில் திருமண புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகின. ஆனால் இரண்டாவது திருமணம் குறித்த தகவல்கள் அனைத்தும் வெறும் வதந்தி என மறுத்த அமலா பால், அந்த புகைப்படங்கள் அனைத்தும் மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் எடுக்கப்பட்டவை என்றும், அதை ஏன் பவ்னிந்தர் வெளியிட்டார் என்பது தெரியவில்லை என்றும் விளக்கம் அளித்தார். 


இந்த சர்ச்சையை தொடர்ந்து அமலா பால், பவ்னிந்தர் சிங்குடனான காதலை முறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. பவ்னிந்தரை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்வதை அமலா பால் நிறுத்தியுள்ளது. இதன் மூலம் செய்தி உண்மையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக திருமணம் நடந்தது போன்ற புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்த பவ்னிந்தர் சில மணி நேரங்களிலேயே அவற்றை நீக்கியது குறிப்பிடத்தக்கது.