மாஸ்டர் படப்பிடிப்பு தளத்திற்கே சென்று விஜயிடம் விசாரணை நடைபெற்றது வழக்கத்திற்கு மாறான அரிதினும் அரிதான சம்பவமாக பார்க்கப்படுகிறது. பொதுவாக ஒருவரை குறி வைத்து வருமான வரித்துறை சோதனை என்று களம் இறங்கினால் அவர் தொடர்புடைய இடங்களை தாண்டிச் செல்வதில்லை. ஆனால் விஜய் இருந்தது மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில். அந்த படத்தை தயாரிப்பது எக்ஸ் பி பிலிம்ஸ். ஆனால் சோதனை நடைபெற்றதோ ஏஜிஎஸ் குழுமத்தில். இப்படி இருக்க எக்ஸ் பி நிறுவனம் சார்புடைய ஒரு படப்பிடிப்பு தளத்திற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சென்றது பலரையும் புருவத்தை உயரச் செய்தது. இதற்கு காரணம் பிகில் படத்திற்காக விஜய் வாங்கியதாக கூறப்படும் சம்பளம் தான்.  பொதுவாக விஜய் தனது சம்பளத்தின் பெரும் பகுதியை கருப்பு பணமாக வாங்க கூடியவர். முன்னரெல்லாம் விஜய் படத்தின் சம்பளத்துடன் சென்னை ஏரியா விநியோக உரிமையையும் வாங்கிக் கொள்வார். ஆனால் சில காலமாக அந்த முறையை விஜய் கைவிட்டுவிட்டார்.

மாறாக சம்பளத்திற்கு வர வேண்டிய தொகையில் கணிசமான தொகையை சொத்துகளில் முதலீடு செய்வதை விஜய் வழக்கமாக கொண்டுள்ளார். இந்த உண்மை தெரிந்த பிறகு தான் விஜயை கொத்தாக தூக்கியுள்ளது வருமான வரித்துறை. பிகில் படத்திற்கு சம்பளம் என்று கடந்த ஆண்டு விஜய் ஒரு தொகையை வருமான வரித்துறையிடம் தெரிவித்துள்ளார். ஆனால் வெளியான தகவல்களோ படத்தின் வசூலை 300 கோடி ரூபாய் என்று குறிப்பிடுகிறது. 300 கோடி ரூபாய் வசூலான படத்திற்கு இவ்வளவு கம்மியாகவா விஜய் சம்பளம் வாங்கியிருப்பார் என்கிற சந்தேகம் தான் ஏஜிஎஸ் குழுமத்தை நோக்கி வருமான வரித்துறையை நகர்த்தியுள்ளது. வருமான வரித்துறை எதிர்பார்த்தது போலவே ஏஜிஎஸ் குழுமம் விஜய்க்கு கொடுத்ததாக கூறிய சம்பளம் விஜய் சொன்ன சம்பளத்தில் பாதி கூட இல்லை. இதனை அடுத்து நடைபெற்ற கிடுக்கிபிடி விசாரணையில், விஜய்க்காக ஏஜிஎஸ் குழுமம் செய்த முதலீடுகளும் தெரியவந்தன.

இதன் பிறகே வருமான வரித்துறை டீம், நெய்வேலியில் முகாமிட்டிருந்த விஜயை தூக்கியுள்ளது. இதற்கு முன்பு விஜய் வீட்டில் இரண்டு முறை வருமான வரித்துறை ரெய்டு நடைபெற்றுள்ளது. அப்போது எல்லாம் விஜயுடன் அவரது தந்தை இருந்துள்ளார். இதனால் லாவகமாக விஜயால் விசாரணையில் இருந்து தப்ப முடிந்தது. ஆனால் இந்த முறை மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் விஜய் தனியாக அதிகாரிகளிடம் சிக்க அவருக்கு என்ன செய்வது என்றே தெரியாமல் அதிகாரிகள் வலையில் வீழ்ந்துள்ளார். நெய்வேலியில் இருந்து விஜயை நடுவே உட்கார வைத்து இரண்டு பக்கமும் அதிகாரிகள் உட்கார வைத்து சென்னை பனையூரில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர். இது விஜய்க்கு முழுக்க முழுக்க புதிய அனுபவம். கிட்டத்தட்ட ஒருவரை கைது செய்து அழைத்துச் செல்வது போல் தான் அழைத்து வந்துள்ளனர். லாங் டிரைவ் என்றால் விஜய் இன்னோவா காரை பயன்படுத்துவார். மூன்று பேர் அமரக்கூடிய சீட்டில் அருகே ஒருவரை மட்டும் அமர வைத்துவிட்டு வசதியாக பயணம் மேற்கொள்வது விஜயின் பாணி.

ஆனால் நெய்வேலி டூ சென்னை இரண்டு பக்கமும் அதிகாரிகள் இருக்க மிகவும் சிரமத்துடன் தான் பனையூரில் உள்ள தனது வீட்டிற்கு வந்து சேர்ந்துள்ளார் விஜய். அங்கும் வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை என்பதால், அவரது மனைவி மற்றும் விஜய் மட்டுமே அதிகாரிகளிடம் சிக்கியுள்ளனர். இருவரிடமும் துருவித்துருவி விசாரணை நடைபெற்றுள்ளது. பெரும்பாலான கேள்விகளுக்கு ஆடிட்டரிடம் தான் கேட்க வேண்டும் என்று விஜய் பதிலாக கொடுக்க, அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் கேட்ட கேள்வியையே திரும்ப திரும்ப கேட்டுள்ளனர். விஜய் மட்டும் இல்லாமல் அவரது மனைவியையும் அதிகாரிகள் விடவில்லை. இரவு முழுவதும் சங்கீதாவையும் தூங்கவிடாமல் விசாரணை நடைபெற்றுள்ளது. 24 மணி நேர விசாரணையில் சில மணி நேரங்கள் தான் இருவருக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டதாக சொல்கிறார்கள். மற்ற நேரங்களில் அதிகாரிகள் தங்களிடம் உள்ள ஆவணங்களை காட்டி விஜயை கேள்விகளால் துளைத்துள்ளனர்.