இசையமைப்பாளரும், இசைஞானி இளையராஜாவின் மகனுமான யுவன் சங்கர் ராஜா தன்னுடைய அப்பா இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

சமீபகாலமாக தொடர்ந்து திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், நிஜ வாழ்க்கையில் சாதித்த மனிதர்கள் பற்றிய வாழ்க்கை வரலாறு படங்கள் அதிகமாக எடுக்கப்பட்டு வருகிறது. இப்படி எடுக்கப்படும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைப்பதால், இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் இது போன்ற படங்களை எடுக்க முன்வருகின்றனர்.

அந்த வகையில் வெளியான, தங்கள், தோனி, சச்சின் வாழ்க்கை வரலாறு, சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படங்கள் வெற்றி பெற்றது மட்டும் இன்றி, வசூலையும் அல்லி குவித்தது.

தற்போது கூட நடிகர் சூர்யா விமான நிறுவனர் ஜிஆர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட்டு வரும் 'சூரரைப்போற்று' படத்தில் நடித்து வருகிறார். 

இதேபோல் பிரபல இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா, தன்னுடைய தந்தை இசைஞானியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கும் எண்ணத்தில் இருப்பதை கூறியுள்ளார். ஏற்கனவே இசையமைப்பாளர், தயாரிப்பாளர், என கலக்கி வரும் யுவன், இப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுக்க உள்ளார்.

சமீபத்தில் நடந்த திரைப்பட விழாவில் பேசிய யுவன்சங்கர் ராஜா 'இசைஞானி இளையராஜா' வாழ்க்கை படம் குறித்து இந்த தகவலை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த படத்தில் நடிகர் தனுஷ் தன்னுடைய அப்பாவின் வேடத்தில் நடித்தால் மிகவும் நேர்த்தியாக இருக்கும் என, கூறியுள்ளார். இந்த படத்திற்கு 'ராஜா தி ஜர்னி' என்று பெயர் வைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். எனவே, இந்த படம் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.