மீடூ #MeToo என்ற ஹேஷ்டேக் இந்தியாவில் ட்ரெண்ட் ஆகி வரும் நிலையில் பாலியல் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்ட பல திரையுலக புள்ளிகள் கலக்கத்தில் உள்ளனர். #MeToo ஹேஷ்டேக் மூலம் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் வெளிச்சத்திற்கு வருகின்றன. பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக இதில் நிறைய குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். சின்மயிக்கு ஆதரவாக தமிழ் சினிமா மட்டுமல்ல தெலுங்கு திரையுலகம் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

கடந்த இரு வாரங்களுக்கு முன்பு பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா, பிரபல நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் கூறியிருந்தார். இந்தியாவில் #MeToo ஹேஷ்டாக் ட்ரெண்ட் ஆக முதல் காரணம் நடிகை தனுஸ்ரீ தத்தா தான். நடிகர் நானா படேகர் மீது தனுஸ்ரீ கொடுத்த புகாரை அடுத்து, அவர் மீது எஃப்ஐஆர் பதியப்பட்டுள்ளது. தனுஸ்ரீ தத்தா புகாரில், 2008 ஆம் ஆண்டு ஹார்ன் ஓகே ப்ளீஸ்'  இந்திப் படத்தில் பாடல் ஒன்றுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு, அந்த பாடல் படப்பிடிப்பின்போது நானா படேகர் என்னிடம் தவறாக நடக்க முயன்றார்.

நடனம் ஆடும்போது, தகாத இடங்களில் கை வைத்தார். நடன இயக்குநரிடம் சொல்லி என்னோடு நெருக்கமாக இருக்கும்படியான ஸ்டெப்ஸ் வைக்க சொன்னார். அதற்கு நான் மறுத்துவிட்டேன். இது குறித்து தயாரிப்பாளர், இயக்குநர், நடன இயக்குநர் ஆகியோரிடம் முறையிட்டேன். ஆனால் அவர்கள் நானா படேகருக்கு ஆதரவாகவே செயல்பட்டனர். ஒரு கட்டத்தில் வலுக்கட்டாயமாக அடியாட்கள் மூலம் வெளியேற்றப்பட்டேன் என்று கூறியிருந்தார். ஆனால், நானா படேகர், படப்பிடிப்பின்போது நூற்றுக்கும் மேற்பட்டோர் இருக்கும்போது பாலியல் தொல்லை கொடுத்திருக்க முடியுமா என்று கேள்வி எழுப்புகிறார்.

இந்த நிலையில், மீடூ மூலம், திரை இசை பிரபலங்கள் பாலியல் குற்றங்கள் குறித்து பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில், தனுஸ்ரீ தத்தாவின் இந்த விவகாரம் மேலும் விஸ்வரூபம் எடுத்தது. இந்தநிலையில் தனுஸ்ரீ தத்தா, தனது வழக்கறிஞருடன் போலீஸ் நிலையத்துக்கு சென்று நானா படேகர் உள்ளிட்ட 5 பேர் மீது எழுத்துபூர்வமாக புகார் ஒன்றை அளித்தார். இதனை அடுத்து தனுஸ்ரீயை போலீசார் விசாரணை நடத்தினர். இதனை அடுத்து, நானா படேகர் மீது எப்ஃஐஆர் பதிவு செய்யப்பட்டது. அவர்கள் மீது 354, 509 சட்டபிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.