நடிகர் விஜய், சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீடுகளில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் அமலாக்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கடந்த 10 நாட்களுக்கு முன் நடிகர் விஜய், அன்புச்செழியன் ஆகியோரின் வீடு, அலுவலகம் என 38 இடங்களில் சோதனை நடைபெற்றது. சென்னை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற இச்சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் வருமானவரித்துறையினர் தற்போது அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். எப்போது  வருமானவரித்துறை சோதனை நடைபெற்றாலும் அதில் கைப்பற்றப்படும் ஆவணங்கள், முதல்கட்ட விசாரணைக்கு பிறகு அமலாக்கத்துறையிடம் ஒப்படைக்கப்படும். 

அவர்கள் அந்த ஆவணங்களை ஆய்வுக்கு உட்படுத்துவார்கள். அதன் பிறகு சோதனையில் குற்றம் நடந்திருப்பது கண்டறியப்பட்டால் அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை தொடங்கும். அந்த அடிப்படையில் தான் தற்போது அமலாக்கத்துறையினரிடம் இந்த ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டு இருக்கின்றன. ஏற்கனவே 38 இடங்களில் நடைபெற்ற சோதனையின் போது பைனான்சியர் அன்புச்செழியனின் மதுரை, சென்னை உள்ளிட்ட இடங்களில் கணக்கில் காட்டப்படாத சுமார் 77 கோடி ரூபாய் ரொக்கம், பல்வேறு முக்கிய சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியது.

இந்த சோதனை தொடர்பாக மூன்று பேருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. நேரில் ஆஜராகவும் அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர். அதன் அடிப்படையில் நடிகர் விஜய், கல்பாத்தி, அன்புச்செழியன் ஆகியோரது ஆடிட்டர்கள் புலனாய்வு அதிகாரிகளை சந்தித்து ஆவணங்களை சமர்ப்பித்து விளக்கம் அளித்தனர். மேலும் அன்புச்செழியனும் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில் மூவரின் வீடு, அலுவலகங்களில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள், அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 

சட்டவிரோத பண பரிவர்த்தனை நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து அமலாக்கத் துறையிடம் ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, அமலாக்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள ஆவணங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவர்கள் விசாரணைக்கு அழைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.