2012ம் ஆண்டு 'அட்டகத்தி' என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பா.ரஞ்சித். அந்தப்  படத்தின் வெற்றியைத்  தொடர்ந்து 'மெட்ராஸ்' திரைப்படத்தினை இயக்கினார். அந்தப்  படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்ப்பினைத்  தொடர்ந்து இந்தியாவின் உச்ச நட்சத்திரத்திரங்களில் ஒருவரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்கும் வாய்ப்பு ரஞ்சித்துக்கு கிடைத்தது. 

கிடைத்த வாய்ப்பினை மிகச்சரியாக பயன்படுத்தி வணிக ரீதியாகவும், தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் விதமாக 'கபாலி' திரைப்படத்தினை இயக்கினார். மீண்டும் அதே கூட்டணி ஒன்றிணைந்து 'காலா' திரைப்படத்தினை உருவாக்கினார்கள். இப்படத்தினை இந்தியாவின் உச்ச நட்சத்திரமாக வளர்ந்து வரும் தனுஷ் அவர்கள் தயாரித்திருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. 

இந்நிலையில், சூப்பர் ஸ்டாரயே இரண்டு முறை இயக்கிய ரஞ்சித்தின் அடுத்த கட்ட பாய்ச்ல் என்ன என்பதை அறிந்துகொள்ள கோலிவுட் வட்டாரமே மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தது. 

இது குறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலில், இயக்குனர் பா. ரஞ்சித் தன்னுடைய அடுத்தப் படத்தினை பாலிவுட்டில் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் வரலாற்று பின்னணிக்  கொண்ட உண்மை சம்பவத்தினை அடிப்படையாகக்  கொண்டதாம்.

இப்படத்தினை ஈரானிய இயக்குனர் மஜித் மஜிதி இயக்கிய "பியான்ட்  தி கிளவுட்ஸ்' திரைப்படத்தினை தயாரித்த 'நம பிக்சர்ஸ்' தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் சன்னி லியோனின் வாழ்க்கையை அடிப்படையாகக்  கொண்டு வெளிவந்த 'கரன்ஜித் கவுர்' என்ற வெப் தொடரையும் தயாரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ரஞ்சித்திடம் அடுத்த தமிழ் படத்தை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சி உள்ளது.