மலையாள இயக்குனர் பிரியதர்ஷன் அதிக படங்களை இயக்கிய பெருமைக்கு உரியவர். இதுவரை 95 படங்களை இயக்கி உள்ளார். பாலிவுட் திரையுலகில் மட்டும் அதிக பட்சமாக 26 படங்களை இயக்கியுள்ளார். 

இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு தமிழில் இயக்கிய காஞ்சிவரம் படத்திற்காக தேசிய விருது கிடைத்தது. மேலும் இந்த படத்தில் நடித்த நடிகர் பிரகாஷ் ராஜுக்கு தேசிய விருது கிடைத்தது. தமிழில் இவர் இயக்கத்தில் இந்த வருடம் நடிகர் உதயநிதி நடித்து வெளியான 'நிமிர்' திரைப்படம் சிறந்த படைப்பாக பார்க்கப்பட்டது. 

இந்நிலையில் கடந்த 40 ஆண்டுகளாக திரைப்படத்துறைக்கு சிறந்த பங்களிப்பை செய்துள்ள பிரியதர்ஷனுக்கு மத்திய பிரதேச அரசு உரிய கவுரவத்தை அளித்துள்ளது. அம் மாநில அரசு வழங்கும் உயரிய விருதுகளில் ஒன்றான சிறந்த திரைப்பட சாதனையாளருக்கான கிஷோர் குமார் விருதை இந்த வருடம் பிரியதர்ஷனுக்கு அளித்துள்ளது.

இந்த விருதை இதற்கு முன்பு நடிகர் அமிதாப்பச்சன் , ரிஷிகேஷ் முகர்ஜி, குல்சார், ஷியாம் பெனகல், ஆகியோருக்கு மத்திய பிரதேச அரசு வழங்கியுள்ளது. முதல் முதலாக தென்னிந்தியாவிலிருந்து இந்த விருதை பெறுகிறவர் பிரியதர்ஷன். விரைவில் கிஷோர் குமாரின் இல்லத்தில் நடக்கும் விழாவில் அம்மாநில முதல்வர் இந்த விருதை பிரியதர்ஷனுக்கு வழங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.