தளபதி விஜய்யின் தந்தை இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரைத் தொடர்ந்து ஆளும் அ.தி.மு.க. ஆட்சிக்கு எதிராக இயக்குநர் சேரனும் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார். இப்பதிவை ஆதரித்தும் எதிர்த்தும் அவரது பக்கத்தில் கமெண்டுகள் குவிந்து வருகின்றன.

நாளை தமிழக சட்டசபை இடைத்தேர்தல் முடிவுகள் வர உள்ள நிலையில் திரைத்துறையில் ஆளும் கட்சிக்கு எதிராக நிறைய குரல்கள் ஒலித்து வருகின்றன. இரு தினங்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய்யின் தந்தை தற்போதைய அரசியலில் இருப்பவர்களில் 90 சதவிகிதம் பேர் திருடர்கள் என்று விளாசினார்.

இந்நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறோம் என்று துணிச்சலாக[ப் பதிவிட்டிருக்கிறார். இன்றைய அவரது பதிவில்,...தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம் எதிர்பார்க்கிறோம். ஏன்.. அவரவர் வேலை தொழில் வாழ்க்கைமுறையில் நிம்மதியான செழிப்பான வாழ்க்கை அனைவர்க்கும் வேண்டும் என்பதால். தலைவர்கள் மாறினால் அதுநடக்காது.. மக்களும் தன்னை நேர்மைப்படுத்திக்கொண்டு சிலவற்றை விட்டுக்கொடுத்தால் மட்டுமே மாற்றம் சாத்தியம்’ என்று பதிவிட்டிருக்கிறார்.