ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் இன்னும் நயன்தாரா பஞ்சாயத்து முடிவுக்கு வராததைத் தெரிந்துகொண்டோ என்னவோ ‘தமிழில் நான் ஜோடியாக நடிக்கவிரும்பும் ஒரே நடிகர் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்’ என்கிறார் பிரபல மாடலும், நடிகையும் புகழ்பெற்ற எழுத்தாளருமான டிகன்கான சூர்யவன்சி.

தெலுங்கில் வெற்றி வெற்றி பெற்ற ’RX 100’ படத்தின் நாயகன் கார்த்திகேயா நடிக்க தமிழில் பல வெற்றிப்படங்களை தயாரித்த கலைப்புலி எஸ். தாணு தயாரிக்க, சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை போன்ற படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்கத்தில் தற்போது உருவாகிவரும் படம்  ’ஹிப்பி’.

 இப்படத்தில் நாயகியாக நடித்துவரும் டிகங்கான சூர்யவன்ஷிக்கு 2018  ம் ஆண்டிற்கான தாதாசாகெப் பால்கே சர்வதேச சினிமா விருது கிடைத்துள்ளது. 
இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் புகழ் பெற்றவர் டிகங்கான சூர்யவன்ஷி. சின்னத்திரையிலிருந்து சினிமாவிற்குள் நுழைந்து இந்தி திரைப்படங்களில் தனது இயல்பான நடிப்பு திறமையை வெளிப்படுத்தியதற்காக ‘வளர்ந்து வருகிற நடிகை’க்கான இந்த விருதை அவர் பெற்றுள்ளார். 

இவர் விரைவில் தமிழிலும் நாயகியாக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாவது குறித்து கேட்ட போது, ‘உண்மையிலேயே மிக சந்தோஷமாக இருக்கிறேன். தென்னிந்திய மொழிகளில் அறிமுகமாக நல்ல கதையை எதிர்பார்த்து காத்திருந்த போது இந்த படவாய்ப்பு கிடைத்தது. நீண்ட நேரம் ஷூட்டிங் எடுக்கிறார்கள். சென்னை, ஐதராபாத், ஸ்ரீலங்கா போன்ற இடங்களில் ஷூட்டிங் நடைப்பெற்றது. 

ஷூட்டிங் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் ஒவ்வொரு காட்சியையும் அனுபவித்து நடிக்கிறேன். தமிழும், தெலுங்கும் கற்று வருகிறேன். தற்போது எதிரில் பேசுபவர்களின் உதட்டசைவின் மூலமாக அவர்கள் பேசுவதைப் புரிந்துக் கொள்ள முயற்சி செய்கிறேன். இன்னும் சில படங்களில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளிவரும். தமிழ்ப்பட வாய்ப்பு கிடைக்கும்போது அது ரஜினியுடன் நடிக்கும் படமாக இருந்தால் பெரிதும் மகிழ்வேன். ஏனென்றால் தமிழில் ரஜினி, தெலுங்கில் சிரஞ்சீவி ஆகிய இருவரும்தான் எனக்குப் பிடித்த நடிகர்கள்’ என்கிறார்அவர். நோட் பண்ணிக்கங்க மிஸ்டர் ஏ.ஆர்.முருகதாஸ்.