பல பாலிவுட் திரைப்படங்களில் நடித்த நடிகை சுஜாதா குமார் புற்று நோய் காரணமாக, நேற்றிரவு உயிர் இழந்ததாக அவருடைய சகோதரி சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சுஜாதா குமார், நடிகை ஸ்ரீதேவி நடித்த 'இங்கிலீஷ் விங்லீஷ்' படத்தில் ஸ்ரீதேவியின் அமெரிக்க சகோதரியாக நடித்தவர். மேலும் நடிகர் தனுஷ் பாலிவுட் திரையுலகில் முதல் முறையாக அறிமுகமான 'ராஞ்சனா' படத்தில் முதலமைச்சர் வேடத்தில் நடித்திருந்தார்.

கடந்த சில வருடங்களாக, புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த இவர், அதற்கான சிகிச்சையும் எடுத்து வந்தார். அதே போல் இவருக்கு கேன்சர் முற்றியதால் நான்காம் நிலையில் உள்ளவர்களுக்கு அளிக்கப்படும் மெட்டாஸ்டேடிக் சிகிச்சையும் அளிக்கப்பட்டது. 

ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 11:30 மணியளவில் அவர் உயிர் பிரிந்தது. 

இதனை உறுதி செய்யும் விதத்தில், அவருடைய சகோதரி சுசித்ரா... உருக்கமாக தன்னுடைய பதிவை பதிவிட்டுள்ளார். " இதில் தன்னுடைய சகோதரி இல்லாத வெற்றிடத்தை நினைத்து கூட பார்க்க கூட முடியவில்லை. அவருடைய ஆத்மா, இந்த உலகை விட மிக சிறந்த இடத்திற்கு போய் சேரும் என நம்புவதாகவும், அவருடைய நினைவில் இருந்து பழைய நிலைக்கு திரும்புவது மிகவும் கடினமாக உள்ளது என உருக்கமாக கூறியுள்ளார்.