1981ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்த படம் "நெற்றிக்கண்". விசு, கே.பாலச்சந்தர் திரைக்கதை எழுதிய இந்த படத்தை பிரபல இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் இயக்கினார். இதில் திருமண வயதில் மகன், மகள் இருக்கும் 60 வயது தந்தையின் காதல் லீலைகள் தான் படத்தின் ஹைலைட். 

"நெற்றிக்கண்" படத்தில் கல்லூரி இளையனாகவும், வயதான பிளே பாயாகவும் இரட்டை வேடத்தில் ரஜினி அசத்தியிருந்தார். இந்த படத்தை ரீமேக் செய்து இயக்க வேண்டும் என்ற ஆசை உள்ளதாக நீண்ட நாட்களுக்கு முன்பு பேட்டி ஒன்றில் தனுஷ் கூறியிருந்தார். அதில் நடிக்கும் எண்ணமும் அவருக்கு இருந்தது. ஆனால் அப்பா வேடத்தில் நடித்தார் ரசிகர்கள் ஏற்பார்களா? என்ற கேள்வி தனுஷ் மனதில் இருந்தது. 

அதற்கு விடையாக சமீபத்தில் "அசுரன்" படத்தில் அப்பா கேரக்டரில் நடித்த தனுஷிற்கு பாராட்டுக்கள் குவிந்தது. வசூல் ரீதியாகவும் படம் பட்டையைக் கிளப்பியது. இதையடுத்து "நெற்றிக்கண் 2" படத்தில் நடிப்பதோடு மட்டுமல்லாது, அதை இயக்கவும் உள்ளாராம் தனுஷ். 

அதில் அம்மா மேனகா ஏற்று நடித்த கதாபாத்திரத்தை இப்போது மகள் கீர்த்தி சுரேஷ் ஏற்று நடிக்க உள்ளதாகவும் கோலிவுட்டில் தகவல்கள் பரவி வருகின்றன. தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சுருளி, மாரி செல்வராஜுடன் கர்ணன் ஆகிய படங்களில் பிசியாக நடித்து வரும் தனுஷ், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.