வடசென்னை, என்னை நோக்கி பாயும் தோட்டா, மாரி 2, உள்ளிட்ட படங்களை தொடர்ந்து நடிகர் தனுஷ் முண்டாசுப்பட்டி இயக்குனர் ராம் குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் வடசென்னை திரைப்படம் ஆயுத பூஜை விழாவையொட்டி அக்டோபர் 17ஆம் தேதி ரிலீஸாகிறது. இவர்கள் இருவர் கூட்டணியில் உருவான முந்தைய படங்களான பொல்லாதவன், ஆடுகளம் ஆகியவை மாபெரும் ஹிட்டாகின.    தனுஷ் திரையுலக வாழ்வில் வடசென்னை மைல்கல்லாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இதேபோல் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் தீபாவளியை ஒட் டி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

2015ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற மாரி திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் இந்த ஆண்டு இறுதிக்குள் ரிலீஸாக உள்ளது. இந்த நிலையில் நடிகர் தனுஷை அடுத்து இயக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. எதிர்பார்ப்புக்கு பலனாக தற்போது ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்த முண்டாசுப்பட்டி இயக்குனர் ராம்குமார் தான் அடுத்து தனுஷை இயக்கவுள்ளார். இவர் முண்டாசுப்பட்டி யை தொடர்ந்து விஷ்ணு உடன் இணைந்துள்ள ராட்சசன் திரைப்படம் வரும் 5-ஆம் தேதி ரிலீஸாகிறது. 

 சைக்கோ திரில்லர் திரைப்படமாக இது உருவாகி உள்ளது. காமெடி மற்றும் சைக்கோ திரில்லரை தொடர்ந்து தனுசுக்கு இயக்குனர் ராம் குமார் கொடுக்கப்போகும் படம் என்ன ரகமாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கும் நிலையில் தனுஷை வைத்து அவர் ஃபேண்டஸி படம் கொடுக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது குறித்து பேசிய இயக்குனர் ராம் குமார், திரைக்கதை மிகுந்த சுவாரசியமாக இருக்கும் வகையில் உருவாக்கப்படுவதாகவும் அடுத்த ஆறு அல்லது ஏழு மாதங்களுக்குள்  பணியை முடித்து திரைப்படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  

தனுசை சுற்றியே கதை நகரும் வண்ணம் திரைக்கதை இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இத்திரைப்படத்தில் பணிபுரியும் நடிகர் நடிகைகள் மற்றும் குழுவினர் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. இது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.