நானா படேகர் மீது பாலியல் புகார் கூறிய நடிகை தனுஸ்ரீ தத்தாவுக்கு எதிராக மகாராஷ்டிரா போலீசார் அவதூறு வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்திய திரையுலகில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் விவகாரம் நானா படேகர் மீது இளம் நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் புகார் கூறி இருப்பது தான். ஊதியத்தில் பெரும் பங்கை விவசாயிகளுக்காக செலவு செய்யும் நானா படேகர் மீது நடிகை பாலியல் புகார் கூறியது அதிர்வலைகளை உண்டாக்கியது. 2008ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஓகே ஹார்ன் பிளீஸ் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது தான் இந்த விவகாரம் நடைபெற்றதாக தனுஸ்ரீ தத்தா கூறியுள்ளார். 

ஒரு பாடல் காட்சியில் ஆடுவதற்காக வந்த தன்னை, நானா படேகர் கண்ட இடத்தில் தொட்டதாகவும், இதுகுறித்து கேட்ட போது இயக்குனர் உள்பட படக்குழுவினர் பலரும் மிரட்டியதாகவும், மகாராஷ்டிரா நவநிர்மான சேனா ஆட்களைக் கொண்டு தமது காரை அடித்து நொறுக்கியதாகவும் நடிகை தெரிவித்து இருந்தார். காரை அடித்து நொறுக்கும் காட்சிகளும் மீண்டும் ஒரு முறை சமூக வலைத்தளங்களை வட்டமிட்டன. 

இவர் புகார் குறித்து எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படாத சூழலில், சமூக சேவகர் கவுரவ் என்பவர் தேசிய மகளிர் ஆணையத்தை நாடினார். இதன்படி, நானா படேகர் மீதும், தனுஸ்ரீ தத்தா பாலியல் புகார் கூறிய சாக்லேட் பட இயக்குனரான விவேக் அக்னிஹோத்ரி மீதும் புகார் பதிவு செய்யப்பட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதேபோல் இருவர் தரப்பில் இருந்தும் நடிகைக்கும் வழக்கறிஞர் நோட்டீஸ் சென்றுள்ளது. இந்த நிலையில், நடிகைக்கு மேலும் ஒரு சிக்கலாக அவர் மீது மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள கைஜ் காவல்நிலையத்தில் அவதூறு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா பற்றி நடிகை தனுஸ்ரீ தத்தா குறிப்பிட்டுப் பேசி, அதன் தலைவர் ராஜ் தாக்கரேவுக்கு எதிராக அவதூறு பரப்பி விட்டதாக அளிக்கப்பட்ட புகாரில் ஐபிசி பிரிவு 500ன் கீழ் தனுஸ்ரீ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புகார் அளித்தவர்களை நீதிமன்றத்தை நாடச் சொல்லி விட்டதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே பிக் பாஸ் படபிடிப்பு தளத்திற்குள் நடிகை செல்லவிருந்த நிலையில், தனுஸ்ரீ தத்தாவை அனுமதித்தால் படப்பிடிப்பு தளம் அடித்து நொறுக்கப்படும் என்று எம்.என்.எஸ். மிரட்டல் விடுத்த நிலையில் தற்போது புகார் அளித்து வழக்குப்பதிவு செய்ய வைத்திருப்பது நடிகைக்கு சிக்கலை அதிகப்படுத்தியுள்ளது.