பிக்பாஸாக டி.வி.யில் வந்து இளம் தலைமுறையை கவர்ந்தாலும் சரி, மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கி கிராமம், கிராமமாக பிரச்சாரம் செய்வதானாலும் சரி, புரியாமல் பேசினாலும் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் கலக்குவதிலும் சரி உலக நாயகனை அடித்துக் கொள்ள ஆள் இல்லை. சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் தசாவதாரங்கள் எடுக்க கூடியவர். அப்பேர் பட்ட கமல் ஹாசன் ரசிகர்களுக்கு இருக்கும் ஒரே ஒரு குறை மருதநாயகம் எப்போது திரைக்கு வரும் என்பது தான். 

1997ம் ஆண்டு மருதநாயகம் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கியது. எம்.ஜி.ஆர். ஃபிலிம் சிட்டியில் நடைபெற்ற ஷூட்டிங்கில் இங்கிலாந்து மகாராணி எலிசபெத் கலந்து கொண்டு, சுமார் 20 நிமிடங்கள் வரை செட்டில் இருந்தார். மேலும் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 

கையில் உள்ள முழு பணத்தையும் தனது கனவு படமான மருதநாயகத்திற்காக செலவழித்தார். அந்த காலக்கட்டத்தில் மருதநாயகம் படத்தை முடிக்க சுமார் 50 கோடி தேவைப்பட்டது. ஆனால் அன்று அந்த தொகை மிகப்பெரியது என்பதால், படத்தை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. சுமார் 23 ஆண்டுகளாக கிடப்பில் இருந்த மருதநாயகம் படத்தை மீண்டும் தொடங்க உள்ளார் உலக நாயகன் கமல் ஹாசன்.

ஆனால் இந்த முறை நாயகன் அவர் இல்லையாம். கமல் ஹாசனின் சொந்த ஊரான பரமக்குடியைச் சேர்ந்த நம்ம சீயான் விக்ரம் தான் மருதநாயகம் படத்தில் நடிக்க உள்ளாராம். அந்த படத்தை கமல் ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கமல் தயாரிப்பில் விக்ரம் நடிக்க உள்ளார் என்ற டபுள் சர்ப்பிரைஸ் ரசிகர்களை உற்சாகமாக்கியுள்ளது.