சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாறுகளை சினிமா ஆக்குவதில் பாலிவுட்டில் அதிக ஆர்வம்காட்டி வருகின்றனர். அப்படி வெளியான சில பயோபிக் படங்கள் வசூலை வாரி குவித்துள்ளதால் இந்தப் போக்கு இப்போது அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.

கிரிக்கெட் வீரர்கள் சச்சின், தோனியின் படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதையும் தாண்டி தங்கல் போன்ற படங்கள் விமர்சன ரீதியிலும் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

மேலும் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் வாழ்க்கை, சச்சின் வாழ்க்கை வரலாறு, தோனியின் வாழ்க்கை வரலாறு என பயோ பிக் படங்களை எடுத்து வரும் நிலையில், துப்பாக்கிச் சுடும் வீரர் அபினவ் பிந்த்ராவின் வாழ்க்கைக் கதையில் ஹர்ஷ்வர்தன் கபூர் நடித்து வருகிறார். இதனையடுத்து பேட்மின்டன் வீராங்கனையான சாய்னா நேவாலின் வாழ்க்கை படமாக்கப்பட்டு வருகிறது. இதில் ஸ்ரத்தா கபூர் நடித்து வருகிறார்.

இதேபோல, மகளிர் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜின் வாழ்க்கையும் படமாக்கப்படுகிறது. இதில் தப்ஸி நடிப்பார் என்று தெரிகிறது. மேலும்,  பி.வி.சிந்துவின் வாழ்க்கை கதையும் சினிமாவாக எடுக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். இதை பிரபல வில்லன் நடிகர் சோனு சூட் தயாரிக்கிறார். பி.வி.சிந்துவாக தீபிகா படுகோனே நடிக்கிறாராம்.

அந்த வரிசையில் பிரபல டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சாவின் வாழ்க்கை வரலாறு சினிமாவாகிறது. பல்வேறு சினிமா நிறுவனங்கள் அவர் வாழ்க்கை கதையைப் படமாக்க அனுமதி கேட்டு காத்திருந்த நிலையில், ரோனி ஸ்குருவாலாவின்  நிறுவனத்துக்கு சானியா மிர்ஸா ஒப்புதல் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் உரிமைக்காக சானியா மிர்ஸாவுக்குப் பெரும் தொகைக் கொடுக்கப்பட இருக்கிறது. இதில் அவரையே சானியாவாக நடிக்க வைக்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.