அறம் படத்தை இயக்கிய கோபி நயினாரின் அடுத்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகைகளின் சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியான திரைப்படம் அறம். இந்த படத்தை அறிமுக இயக்குனர் கோபி நயினார் இயக்கியிருந்தார். இதில் மதிவதனி என்ற கதாபாத்திரத்தில் மாவட்ட ஆட்சியராக நயன்தாரா நடித்து இருப்பார். மூடாமல் விடப்பட்ட ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தையை எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பதை பதைபதைப்புடன் காட்சிப்படுத்தி இருப்பார் இயக்குனர். 

இதில் அடித்தட்டு மக்களின் வாழ்வியல் தத்ரூபமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். இந்தப் படத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்ததுடன் நயன்தாராவின் திரையுலக வாழ்விலும் மைல் கல்லாக இந்தப் படம் இருந்தது என்றே கூறலாம். இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்தை இயக்குனர் கோபி நயினார் எடுக்கவுள்ளதாக கூறப்பட்டது. 

இதற்கிடையில் இந்த முடிவை தற்காலிகமாக கைவிட்ட அவர் நடிகர் ஜெய்யை வைத்து வடசென்னை வாழ்வியலை மையமாக வைத்து திரைப்படம் எடுக்க திட்டமிட்டுள்ளார். இதற்கான பணிகள் ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த படம் வடசென்னை இளைஞர்களின் குத்துச்சண்டை திறனை மையப்படுத்தி எடுக்கப்படவுள்ளது. தேனி ஈஸ்வர் படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவுள்ளார். படத்திற்கு பிரசாத் இசை அமைக்கிறார்.