கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்ததால், கடந்த 8ஆம் தேதியிலிருந்து அங்குள்ள பெரும்பாலான மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது. இதனால் அங்குள்ள அணைகளும் நிரம்பி வழிகிறது. பெருமழையால் கேரளாவில் உள்ள 10திற்கும் மேற்பட்ட  மாவட்டங்களில் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. 

மேலும் நிலசரிவு ஏற்பட்டதால், பல வீடுகள் மண்ணில் புதைந்தது. இதில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 357 என அம்மாநில முதலமைச்சர் தெரிவித்தார். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

223139 மக்கள் 1500க்கும் மேற்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 5.91 கோடி ரூபாய் அளவுக்கு வீடுகள், தோட்டங்கள், சுமார் 1,513 ஹெக்டர் அளவிலான விளை நிலங்கள் சேதம் அடைந்துள்ளன.  ஆடு மாடுகள் என கால்நடைகள் அதிகமாக உயிரிழந்துள்ளது. ஏராளமான மக்கள் தங்களது வீடுகள், உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர்.

இதனால் இவர்களுக்கு உலகில் உள்ள அனைவரும் உதவிகரம் நீட்டி வருகின்றனர். கோலிவுட் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் உதவி வரும் நிலையில் தற்போது அஜித், விஜய்,போன்ற முன்னணி நடிகர்களை வைத்து இயக்கி வெற்றிப்படங்களை கொடுத்துள்ள இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கேரள முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு ரூபாய் 10 லட்சம் நிதி உதவி வழங்கியுள்ளார்.