ஊரடங்கு உத்தரவு:

கொரோனா வைரஸ், இந்தியாவில் தன்னுடைய கோர முகத்தை காட்டி வருவதால், ஏப்ரல் 14  ஆம் தேதி வரை, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கிட்ட தட்ட 21 நாள் இந்த ஊரடங்கு உத்தரவு கடுமையாக பின்பற்றப்பட்டு வருவதால் தின கூலி வேலை செய்து பிழைப்பை ஓட்டி வரும் பலர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட சினிமா தொழிலாளர்கள்:

பெப்சி அமைப்பின் கீழ் மொத்தம் 24 துறையை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். கொரோனா பாதிப்பு நடவடிக்கையால், பெப்சி அமைப்பில் உள்ள இந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அன்றாட சாப்பாட்டிற்கே அவர்கள் கஷ்டப்படும் நிலை உருவாகியுள்ளது.

ஆர்.கே.செல்வமணி அறிக்கை:

இந்நிலையில் கடந்த மாதம் பிரபல இயக்குனரும், பெப்சி அமைப்பின் தலைவருமான ஆர்.கே.செல்வமணி மிகவும் உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், பிரபலங்கள் பெப்சி தொழிலாளர்களுக்கு அரிசியாக கொடுத்தால் கூட, இந்த வேலை இல்லா நாட்களில், அவர்கள் கஞ்சியை குடித்தாவது வாழ்க்கையை ஓட்டி கொள்வார்கள் என மனதை உருக்கும் படி தெரிவித்திருந்தார்.

பிரபலங்கள் உதவி:

இந்த அறிக்கை வெளியானதும் நடிகர் சூர்யா, தன்னுடைய குடும்பத்தின் சார்பாக... பெப்சி தொழிலாளர்களுக்கு ரூ.10 லட்சம் நிதி வழங்குவதாக அறிவித்தார். இதை தொடர்ந்து, நடிகர் சிவ கார்த்திகேயன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நயன்தாரா ஆகிய பலர், பணமாகவும் அரிசியாகவும் பெப்சி தொழிலாளர்களுக்கு தங்களால் முடிந்த உதவியை செய்து வருகிறார்கள்.

ஏ.ஜி.எஸ் நிறுவனம் உதவி:

இந்நிலையில் தற்போது தளபதி விஜய் நடித்த ’பிகில்’ உள்பட பல வெற்றிப்படங்களை தயாரித்து வரும், முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏஜிஎஸ், தகளுடைய சார்பாக பெப்சி தொழிலாளர்களுக்கு ரூபாய் 15 லட்சம் வழங்கியுள்ளனர். 

கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ் சுரேஷ் ஆகியோர் இணைந்து இந்த நிதி உதவி செய்துள்ளனர். இதனையடுத்து பெப்சி தொழிலாளிகள் ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு தங்களுடைய நன்றிகளை தெரிவித்து வருகிறார்கள்.