‘எனது ரசிகர்கள் தொடர்ந்து சமூக நல சேவைகளில் ஈடுபட்டு வருவதால் மக்களிடம் எனக்கு நல்ல செல்வாக்கு உள்ளது. எனவே எதிர்காலத்தில் நான் அரசியலுக்கு வந்தே தீருவேன்’என்று அடம்பிடிக்கிறார் குத்துப் பாடலுக்கு ஆடிவரும் நாயகியும் பிக்பாஸ் பிரபலமுமான யாஷிகா ஆனந்த். அவர் பிரபல அரசியல் கட்சியில் இணைவாரா அல்லது தனிக்கட்சி ஆரம்பிப்பாரா என்பது குறித்து எதுவும் சொல்லவில்லை.

புவன் நல்லான் இயக்கத்தில் யாஷிகா ஆனந்த், யோகி பாபு நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ’ஜாம்பி’. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய யாஷிகா ஆனந்த்,’ ஜாம்பி படம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் நான் மிகவும் எதிர்பார்க்கும் படம். 4 மாதங்கள் கடின உழைப்பை கொடுத்துள்ளேன். இதுவரை நான் ஏற்காத கதாபாத்திரம். மருத்துவ மாணவியாக வருகிறேன். யோகி பாபு, கோபி, சுதாகர் என காமெடிக்கு பஞ்சமே இருக்காது. படத்தில் சில சண்டைக்காட்சிகளில் நானே ரிஸ்க் எடுத்து ஸ்டண்ட் செய்து இருக்கிறேன். 

பிக் பாசுக்கு பிறகு எனக்கு குடும்ப ரசிகர்கள் அதிகமாகி விட்டார்கள். என் பிறந்தநாளை நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாடினார்கள். இந்த செய்தி அறிந்ததும் நான் எமோஷனல் ஆகிவிட்டேன். கோவை சென்றபோது ரசிகர்களுடன் சேர்ந்து மக்களுக்கு உதவிகள் செய்தேன். எனது ரசிகர்களும்  தொடர்ந்து சமூக நல சேவைகளில் ஈடுபட்டு வருவதால் மக்களிடம் எனக்கு நல்ல செல்வாக்கு உள்ளது. எனவே எதிர்காலத்தில் நான் அரசியலுக்கு வந்தே தீருவேன். அதை யாராலும் தடுக்க முடியாது’என்றார்.