விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மேல் தனக்கு நல்ல அபிப்ராயம் இல்லை என்றும் அந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைத்தால் கண்டிப்பாக போகமாட்டேன் என்றும் முன்னாள் கவர்ச்சி நடிகை விசித்ரா விசித்திரமான கருத்தொன்றைக் கூறியுள்ளார்.

’பிக்பாஸ் 3’ நிகழ்ச்சி ஜுன் மாதம் முதல் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான அறிவிப்பு மற்றும் இரண்டு புரமோ வீடியோக்களை தொலைக்காட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. பார்வையாளர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்ற இந்த நிகழ்ச்சியில் இந்தமுறை பங்கேற்கப்போவது யார் யார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. அந்தவகையில் ஜாங்கிரி மதுமிதா மட்டும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட, எம்.எஸ்.பாஸ்கர், சாக்‌ஷி அகர்வால் ஆகியோரின் பெயர்கள் சாத்தியங்களாக அடிபட்டுக்கொண்டிருக்கின்றன.  ஆனால் இதை நிகழ்ச்சிக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அதேவேளையில் நிகழ்ச்சியில் பங்கேற்க நடிகர், நடிகைகளிடம் தொலைக்காட்சி நிர்வாகம் மும்முரமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் 1990- களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை விசித்ரா, தனது சமூகவலைதள பக்கத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து கருத்து பதிவிட்டுள்ளார்.2002ல் திரையுலகை விட்டு வெளியேறி தனது கணவருடன் புனேவில் செட்டிலான விசித்ரா மீண்டும் ரீ எண்ட்ரிக்காக சென்னையில் முகாமிட்டுள்ளார்.

இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் பிக் பாஸ் 3 குறித்து கமெண்ட் அடித்த விசித்ரா “ இந்த உலகத்தின் முன்பு பல் துலக்குவதும், தூங்கி வீங்கிய முகத்துடன் படுக்கையில் இருந்து எழுந்து குத்துப்பாட்டுக்கு நடனமாடுவதும், அவர்கள் கொடுக்கும் சில்லியான டாஸ்க்குகளை செய்வதும், என்னுடைய நேர்மையான உணர்வுகளை வெளிப்படுத்தாமல் நானல்லாத வேறொருத்தியாக நடிப்பதையும் என்னால் ஒருபோதும் செய்யவே முடியாது’ என்று பதிவிட்டிருக்கிறார்.