தமிழகத்தில் இதுவரை 600 க்கும் அதிகமான மக்களை தாக்கி உள்ளது கொரோனா வைரஸ். இனி வரும் நாட்களில் தான் இன்னும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும், எனவே மக்கள் முடிந்தவரை அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க வெளியில் செல்ல வேண்டாம் என அரசு சார்பில் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

மேலும், வெளியில் செல்ல வேண்டும் என்கிற கட்டாயம் உள்ளவர்கள், சமூக இடைவெளியை கடைபிடித்து... முக கவசம் மற்றும் அடிக்கடி சானிடைசர் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது.

அதே நேரத்தில் தமிழக அரசு பிரபலங்களை வைத்தும் கொரோனா வைரஸில் இருந்து தங்களை எப்படி பாதுகாத்து கொள்ளவேண்டும் என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

அந்த வகையில் ஏற்கனவே சாக்ஷி, சூரி உள்ளிட்ட பிரபலங்கள் தமிழ்நாடு அரசின் விழிப்புணர்வு வீடியோவில் இடம்பெற்ற நிலையில் தற்போது, நடிகை த்ரிஷாவும் இணைந்துள்ளார்.

இதுகுறித்து தற்போது வெளியிடப்பட்டுள்ள வீடியோவில்... கொரோன வைரஸ் சீக்கிரம் பரவ கூடிய வைரஸ். எனவே வெளி நாடு மற்றும் வெளி மாவட்டத்தில் இருந்து வந்தவர்கள் உங்களை தனிமை படுத்திக்கொள்ளுங்கள். இது உங்களை இன்சல்ட் பண்றதுக்கோ... அல்லது டார்ச்சர் பண்றதுக்கோ இல்லை.  உங்களுடைய பாதுகாப்பு மற்றும் உங்கள் வீட்டில் உள்ளவர்கள் பாதுகாப்புக்காக மட்டுமே.

எல்லோரும் சேர்ந்து  ஒற்றுமையாக கொரோனாவை விரட்டுவோம், என திரிஷா தமிழக அரசின், வீடியோவில் பேசியுள்ளார்.