கோவா திரைப்பட விழாவில் தன்னிடம் இந்தியில் பேசும்படி வற்புறுத்திய வடமாநிலத்தவரிடம்  நான் ஏன் இந்தியில் பேச வேண்டும்.? உங்களிடம் தமிழில் பேசட்டுமா என நடிகை டாப்ஸி யோசிக்காமல் கேள்வி எழுப்பியுள்ளது அங்கு மிகுந்த வரவேற்பை பெற்றது.  கோவாவில் 50 வது சர்வதேச திரைப்பட விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. 

அதில், அமிதாப் பச்சன், ரஜினிகாந்த்,  உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.  26 நாடுகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட  திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.  இதில் சிறப்பு அழைப்பாளராக நடிகை டாப்சி அழைக்கப்பட்டிருந்தார். அப்போது அங்கு கூடியிருந்தோர் மத்தியில் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். அப்போது மேடையில் டாப்ஸி ஆங்கிலத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தார் . அப்போது திடீரென குறுக்கிட்ட ஒரு வடமாநிலத்தவர்,  ஒரு நிமிடம் பேச்சை நிறுத்துங்கள் டாப்ஸி என்றார்.  அங்கிருந்த கூட்டம் அனைத்தும் அமைதியானது.   உடனே அனைவர் பார்வையும் அந்த நபர் மீதும் டாப்சி மீதும் விழுந்தது.   அப்போது அந்த நபர் டாபிஸியைப் பார்த்து, நீங்கள் இந்தியில் பேசுங்கள் என்றார்.  உடனே டாப்ஸி,  இங்கு உள்ள அனைவருக்கும் இந்தி புரியுமா என கேள்வி எழுப்ப அங்கிருந்தவர்கள் புரியாது என பதில் அளித்தனர். 

ஆகவே, இந்தியில் பேசினால் இங்கு பலருக்கு புரியாது.  அதனால் ஆங்கிலத்தில் பேசுகிறேன் என்றார் டாப்ஸி.  ஆனாலும் அந்த நபர்  நீங்கள் பாலிவுட் நடிகை என்பதால் இந்தியில் தான் பேசியாக வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தியுள்ளார்.  அதற்கு சற்றும் யோசிக்காத டாப்ஸி... நான் ஹிந்தியில் மட்டும் நடிக்க வில்லை,  தமிழ் மற்றும் தெலுங்கு மொழி சினிமாக்களிலும் நடிக்கிறேன்,  அப்படியானால் நான் உங்களிடத்தில் தமிழில் பேசலாமா என கேள்வி எழுப்பினார்.  டாப்ஸியின் இந்த கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல்  திக்குமுக்காடிப் போன அந்த நபர் உடனே வாயை பொத்திக்கொண்டு,  கப்சிப் ஆகியுள்ளார்.  டாப்சியின் அசத்தலான இந்த பதிலை அரங்கில் இருந்தவர்கள் ஆரவாரம் செய்து வரவேற்றனர்.