உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸின் தாக்கம், தற்போது இத்தாலியையும், ஈரானையும் மோசமாக பாதித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 7 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியா முழுவதும் 350க்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். 


தற்போது தமிழகத்தில் அனைத்து மாவட்ட எல்லைகளையும் மூட முதலமைச்சர் பழனிசாமி அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார். காய்கறி, பால், உணவு பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகள் மட்டுமே திறக்கப்பட்டிருக்கும் என்றும், பிற அனைத்து கடைகளையும் மூடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது திரைத்துறை தான். ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. கோலிவுட்டில் மார்ச் 19ம் தேதி முதல் 31ம் தேதி வரை சினிமா மற்றும் சீரியல் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சினிமா தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். 

இதையும் படிங்க: "கை" தட்டும் போது கூட ரொமான்ஸா?... நயன் - விக்கி அக்கப்போரு தாங்க முடியலடா சாமி...!

வேலை இழந்து வாடும் தொழிலாளர்களுக்கு உதவும் படி பெப்சி சங்கத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி கோரிக்கை விடுத்திருந்தார். வேண்டுகோள் விடுக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே நடிகர் சிவக்குமார் மற்றும் அவர்களது மகன்கள் , நடிகர்களான சூர்யா, கார்த்தி ஆகியோர் சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கல்வி கண் திறக்க அகரம் அறக்கட்டளையையும், விவசாயத்தை காக்க உழவன் அறக்கட்டளையை கார்த்தியும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சினிமா துறையில் தனது சகதொழிலாளர்களுக்கு உடனடியாக உதவ முன்வந்த நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி ஆகியோருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.