தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர், நடிகர் விஜய்சேதுபதி. ஹீரோவாக மட்டும் தான் நடிப்பேன் என தனக்கென எந்த குறிக்கோளும் வைத்து கொள்ளாமல், கதாப்பாத்திரத்திற்கு முக்கியதுவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். 

இந்நிலையில் அடுத்ததாக, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உள்ள படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்கவுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததுதான்.

ஆனால், இந்த படத்திற்கு முன்பே இரண்டு ரஜினி படங்களில் நடிக்க வந்த வாய்ப்பை தான் மிஸ் செய்து விட்டதாக தெரிவித்துள்ளார் விஜய்சேதுபதி.

லிங்கா:

இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில், கடந்த 2014 ஆண்டு வெளியான 'லிங்கா' படத்தில் ரஜினிக்கு வில்லன் கேரக்டரில் நடிக்க வைக்க கே.எஸ்.ரவிகுமார் தன்னை அணுகியபோது, தன்னுடைய மொபைல் எண்ணை மாற்றியதால் அந்த படத்தில் தன்னால் நடிக்க முடிய வில்லை என கூறியுள்ளார்.

கபாலி:

அதே போல் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான 'கபாலி' படத்தில் நடிக்க தன்னிடம் ஆறு நாட்கள் கால்ஷீட் கேட்கப்பட்டதாகவும் , அந்த சமயத்தில் தன்னால் கால்ஷீட் கொடுக்க முடியாததால் அந்த படத்தையும் மிஸ் செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் நமக்கு வரும் வாய்ப்புகள் மிஸ் ஆகின்றது என்றால் அதைவிட பெரிய வாய்ப்பு வரப்போகின்றது என்று அர்த்தம் என்று விஜய்சேதுபதி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.