கேரளாவில் கடந்த 8 ஆம் தேதி தொடங்கிய பேய் மழை 18 ஆம் தேதி வரை கொட்டித் தீர்த்தது. தொடர் கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கால் கேரள மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கியது. வரலாறு காணாத இந்த இயற்கை சீற்றத்துக்கு இதுவரை 350-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

அம்மாநிலத்தில் உள்ள 14 மாவட்டங்களும் நீரில் மூழ்கின, லட்சக்கணக்கனோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடுமையான சேதம் அடைந்துள்ள கேரள மாநிலத்துக்கு, பிற மாநிலங்களும், பொது மக்கள் , திரை நட்சத்திரங்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் என அனைத்துத் தரப்பினரும் நிவாரண நிதி வழங்கி வருகின்றனர்.

மேலும் தமிழகம் உட்பட பல மாநிலங்கள் நிவாரணப் பொருட்களை லாரி, லாரியாக கேரளாவுக்கு அனுப்பிவருகின்றனர்.

நடிகர் விஜய் ரூ.70 லட்சமும், நடிகர் விக்ரம் ரூ.35 லட்சமும், விஜய் சேதுபதி ரூ.30 லட்சமும் நிதியுதவி வழங்கியுள்ளனர். நடிகர்கள் கமல், ரஜினி, சூர்யா, கார்த்தி, விஷால், தனுஷ், சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, பிரபு, நடிகைகள் ரோஹினி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், இயக்குனர்கள் சங்கர், ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட பலரும் நிதியுதவி வழங்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹிந்த நடிகர் அமிதாப் பச்சன் 51 லட்சம் ரூபாயும், பல லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள புதிய உடைகளையும் கேரளாவுக்கு அனுப்பி வைத்தார்.

இந்நிலையில், நடிகர் லாரன்ஸ் ரூ.1 கோடி மதிப்புள்ள செக்கை கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை நேரில் வழங்கினார். அவர் தான் தெய்வமாக மதிக்கும் அம்மாவுடன் சென்று நிதியை வழங்கினார். அவர்கள் இருவருக்கும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

ராகவா லாரன்சும், அவரது தாயரும் மலையாளிகளைப் போன்று உடையணிந்து 1 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கியது அங்கிருந்தவர்களை ஆச்சரிய்ததில் ஆழ்த்தியது. மேலும் ராகவா லாரன்சுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.