Asianet News TamilAsianet News Tamil

'பொறுக்கிஸ்'... "அரசாங்கத்தை தாக்கும் படமல்ல" ஆனால்...? ட்விஸ்ட் வைத்த ராதாரவி..!

பிசாசு, சவரக்கத்தி  படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய மஞ்சுநாத்.S  'பொறுக்கிஸ்’  படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராகவும், இயக்குநராக மாறியுள்ளார். 

Actor Radharavi speech in porukkis audio launch

பிசாசு, சவரக்கத்தி  படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய மஞ்சுநாத்.S  'பொறுக்கிஸ்’  படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராகவும், இயக்குநராக மாறியுள்ளார். 

படத்தின் தயாரிப்பாளர் ராஜாவே கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக லவனிகா நடித்துள்ளார். கதையின் மையத் தூணாக  ராதாரவி நடித்துள்ளார். 
இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. விழாவில் படக்குழுவினருடன் நடிகரும் முன்னாள் பாராளமன்ற உறுப்பினருமான ஜே.கே.ரித்தீஷ், இயக்குநர் கரு.பழனியப்பன், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 
இந்த விழாவில் பேசிய நடிகர்  ராதாரவி படக்குழுவை பாராட்டி பேசும்போது, "இந்தக் குடும்பத்தில் நானும் ஒருவன்.. மலேசியாவில் எனது நண்பர் ஒருவர் சொந்தப் படம் எடுக்கிறேன் எனக் கூறியபோது மஞ்சுநாத்தை அழைத்துச் சென்று கேமராமேனாக அறிமுகம் செய்துவைத்தேன்.. மற்றபடி இப்போதுவரை அவரது சுய உழைப்பு தான்.. மஞ்சுநாத் பார்ப்பதற்கு அமைதியாக இருந்தாலும் புரட்சிகரமான கருத்துக்களை கொண்டவர்.

இந்தப்படத்தில் பாடியுள்ள பாடகர் ஆலயமணியை எனக்கு பிடிக்கும். இன்றைக்கு யார் யாரோ பாடும்போது, முன்னணி நடிகர்கள் எல்லாம் பாடும்போது, அவர்களைவிட, ஆலயமணி நன்றாக பாடக்கூடியவர்.. எனக்கு பாட வராது.. அதனாலேயே அவரைப் பிடிக்கும்..

பியூஸ் மனுஷ் இந்த விழாவில் கலந்துகொள்கிறார் என்றதுமே பயந்தேன்.. காரணம் அவர் எப்போதும் வாரண்ட்டோடு சுற்றுபவர்.. அவருக்கும் எப்போதுமே பொதுவுடமை எண்ணம்.. அதனால் நம்மையும் வாரண்ட்டோடு சுற்ற வைத்து விடுவாரோ என்றும்  அரசியல் மேடை போல இது ஆகிவிடுமோ என்றும் பயந்தேன்.. காரணம் சென்சாரில் பிரச்னையில்லாமல் தப்பிக்கவேண்டுமே என்பதுதான்.

இது அரசாங்கத்தை அட்டாக் பண்ணுகிற படமே அல்ல.. அரசாங்கத்தில் உள்ள குறைகளைப் பற்றி சொல்லும் படம்  இந்த விழாவிற்கு தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசரை அழைத்திருந்தேன்.. முதலில் வருகிறேன் எனச் சொன்னவர், பின் எதனாலோ வராமல் பின்வாங்கிவிட்டார். ஒருவேளை இங்கு வருபவர்களின் பட்டியலைப் பார்த்திருப்பாரோ என்னவோ..?" என்றார் நகைச்சுவையாக. 

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்போது, "இன்றைய சூழலில் கார்ப்பரேட் ஆதிக்கத்தினால், விளைநிலங்களில் வீடுகளை கட்டிவிட்டு உணவுகளை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் காலத்தில், அப்படி ஒரு டிஜிட்டல் இந்தியாவில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.  இந்த காலத்தில் விவசாயத்தின் பெருமைகளை மிகத் தைரியமாகக் கூற ஒரு இயக்குநர் வந்திருக்கிறார் என்கிறபோது மிகவும் பெருமையாக இருக்கிறது. 

சினிமாக்காரர்களிடம் சமூகப் பொறுப்பு இல்லை என்று சமீபகாலமாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், சினிமாக்காரர்களுக்கும் சமூகப் பொறுப்பு இருக்கிறது என்பதை  நிருபிக்க வந்த இயக்குநருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். 

இப்படிப்பட்ட கருத்துகளை சொல்வதினால் எங்களை சமூகவிரோதிகள் , பொறுக்கிகள் என்று சொன்னாலும் சரி அதை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். இப்படிப்பட்ட கருத்துக்களை சொல்ல தைரியம் வேண்டும். இதற்கு ராதாரவியை தேர்ந்தெடுத்தது மிகவும் சரியான ஒன்று. 

படத்தின் ட்ரெய்லரை பார்க்கும்போதே நிறைய அரசியல் இருப்பது தெரிகிறது. ராதாவி சார் சும்மாவே ஆடுவார்.. அவருக்கு சலங்கையும் கட்டி  ஆடவிட்டால் கேட்கணுமா..? நாம வீட்டுக்குள்ளேயே இருந்துகொண்டு போராளிகள் எனச் சொல்லிக்கொண்டு இருக்கக் கூடாது. இந்த மாதிரி கருத்துக்களை தைரியமாக தெரிவிக்க நிறைய சினிமாக்காரர்கள் முன்வரவேண்டும்.

இன்று தமிழ் சினிமாவில் பத்து சதவீதம் தான் பெரிய படங்கள் வருகின்றன. மீதி 90 சதவீதம் சிறிய படங்கள் தான்.. ஆனால் இந்த சின்ன படங்களை வைத்துதான் இன்று சினிமாத் துறையே இயங்கிக்கொண்டு இருக்கிறது. இவங்க, எல்லோரையும் வாழவைக்கும் ஏணியா இருந்துட்டு, இவங்க மட்டும் இன்னமும் அதே இடத்துல இருந்துட்டு இருக்காங்க..இவங்களை ஏற்றிவிட ஊடகங்களின் ஆதரவு வேண்டும்" என வேண்டுகோளுடன் முடித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios