தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி, பூவிருந்தவல்லி அடுத்த செம்பரபாக்கத்தில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சி செட்டில் பல நபர்கள் வேலை செய்து வருகின்றனர். குறிப்பாக வட இந்தியர்களும் இந்த நிகழ்ச்சியில் வேலை செய்து வருகின்றனர். பல்வேறு பணிகளை மேற்கொண்டு வரும் இவர்களில், ஏசி மெக்கானிக் குணசேகரன் என்பவரும் பிக்பாஸ்  செட்டிலேயே தங்கி வேலை செய்து வந்தார். இவர் அரியலூர் மாவட்டம் மத்தூரை சேர்ந்தவர்.

இவர் பிக்பாஸ் செட்டின் இரண்டாவது மாடியில் தங்கி வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு உணவை தனது நண்பர்களுடன் சேர்ந்து சாப்பிட்டு விட்டு கை கழுவ ஓரமாக வந்து உள்ளார். அப்போது  எப்படியோ நிலை தடுமாறி மேலிருந்து கீழே விழுந்ததாக தெரிகிறது. அதன் பின்னர் குணசேகரை அவசர அவசரமாக அருகில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது.

பின்னர் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி அவர் உயிர் இழந்துள்ளார். இது குறித்து நசரத் பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் பிக்பாஸ் செட்டில் பரபரப்பு நிலவுகிறது.