ஒரு ஹாலிவுட் செக்ஸ் க்ரைம் த்ரில்லரை மிஞ்சும் அளவுக்கு சுவாரசியமாகப் போய்க்கொண்டிருக்கும் நடிகை அதிதி மேனன், அவரது கணவன் என்று தன்னைத்தானே அழைத்துக்கொள்ளும் அபி சரவணன் கதையில் இன்னும் ஒரு திருப்பு முனையாக தங்களது திருமண வீடியோ என்ற ஒன்றை அபி சரவணனே வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

போலியான திருமண சான்றிதழ் தயாரித்துக்கொண்டு தன்னை மிரட்டுகிறார். சமூக சேவை செய்வதாக சொல்லிக்கொண்டு பொது மக்களிடம் பணம் வசூலித்து சொகுசாக வாழ்கிறார். அடியாட்கள் வைத்து என்னை பிரட்டுகிறார் என்று நடிகை அதிதி மேனன் இரு தினங்களுக்கு முன்பு சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த அபி சரவணன் அதிதியின் அத்தனை குற்றச்சாட்டுகளையும் மறுத்ததோடு, அவருக்கு இருந்த, தற்போது இருக்கக்கூடிய கள்ளத்தொடர்புகள் என்று பெரும்பட்டியல் ஒன்றை வெளியிட்டார்.

திருமணமாகி தன்னுடன் மூன்று வருடங்கள் வாழ்ந்ததற்கான புகைப்பட ஆதாரங்களை முதலில் வெளியிட்ட அபி சரவணன் அடுத்தபடியாக அதிதிமேனனே ஷூட் பண்ணிய திருமண வீடியோ ஒன்றையும் வெளியிட்டார். அவருக்கு சமீபத்தில் ஆண் நண்பர்களின் தொடர்பு அதிகரித்திருப்பதாகவும், அவர்கள் மூலம் தவறான தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு சினிமா வாய்ப்புகள் பெறுவதற்கு அலைவதாகவும் தெரிவித்த அவர் லேட்டஸ்டாக அதிதியின் நண்பர்கள் பட்டியலில் சேர்ந்த ஒருவர் அதிதியை பிரபல நடிகர் ஜீ.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடிக்க வைப்பதாகச் சொல்லி ஏமாற்றிக்கொண்டிருப்பதாகவும் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.

இவ்வளவு அவதூறான தகவல்களை தனது மனைவி என்று சொல்லிக்கொள்பவர் மீது தொடர்ந்து வெளியிடும் அபி சரவணன் ‘அவர் எவ்வளவு நாசமாப் போனாலும் பரவாயில்லை. என் பொண்டாட்டியை என்கிட்ட ஒப்படைச்சுடுங்க’ என்று கெஞ்சுவதில் இருக்கிற பெருந்தன்மையைத்தான் புரிந்துகொள்ளமுடியவில்லை.