நன்றி மறப்பதென்பது அரசியல்வாதிகளின் முக்கிய தகுதிகளில் ஒன்று என்றாலும் ஜானகி எம்.ஜி.ஆர். விசயத்தில் அதிமுகவினர் இவ்வளவு கல்நெஞ்சோடு நடந்துகொண்டிருக்கவேண்டியதில்லை என்று மனம் புழுங்குகிறார்கள் நிஜமான அதிமுக விசுவாசிகள்.

கடந்த முன்று தினங்களுக்கு முன்பு அதாவது 19.5.2019 அன்று ஜானகியம்மாவுக்கு 23 வது நினைவு நாள். முதல்வர், துணை முதல்வர், மற்றும் அதிமுக நிர்வாகிகளிடமிருந்து ஒரு வரி இரங்கல் அறிக்கை கூட வழங்கப்படாத நிலையில் அவரின் உறவினர்கள் லதா ராஜேந்திரன், செல்வி ராஜேந்திரன் மற்றும் குமார் ராஜேந்திரன் ஆகியோர் மட்டும் நாளிதழ் ஒன்றில் மிகச் சிறிய அளவில் வரி விளம்பரங்களுக்கு மத்தியில் அவருக்காக விளம்பரம் செய்திருந்தனர்.

இந்த இடத்தில் ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக் பார்க்கலாம்...வி.என். ஜானகி கேரளாவில் உள்ள வைக்கம் என்ற ஊரைச் சேர்ந்தவர்.  தோழிப்பெண் வேடத்தில் நடிக்கத் தொடங்கி ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணியில் உச்ச நட்சத்திரம் ஆனார். எம்.ஜி.ஆர் திரையுலகில் வாய்ப்புத்தேடிக்கொண்டிருந்த போது ஜானகி பெரிய ஸ்டாராக விளங்கினார்.  இவர் 1950ல் மருதநாட்டு இளவரசி படத்தில் எம்.ஜி.ஆருடன் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமானார். அப்போது இருவரது சந்திப்பும் தொடங்கியது.

1950ல் காதலிக்கத் தொடங்கி 1962ல் சதானந்தவதி மறைந்த பிறகு இயக்குநர் கே.சுப்ரமணியம் (பத்மா சுப்ரமணியத்தின் தந்தை) தலைமையில் எம்.ஜி.ஆரும் ஜானகியும் திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு இருவரும் ராமாவரம் தோட்டத்துக்குத் தனிக் குடித்தனம் நடத்தக் கிளம்பினர். 1967க்குப் பிறகு ஜெயலலிதா சிலகாலம் வந்து ராமாவரத்தில் தங்கியிருந்தபோது ஜானகி சக்கரபாணி குடும்பத்துடன் தங்கும்படி அனுப்பி வைக்கப்பட்டார். இப்போதும் சக்கரபாணியால் தன் தம்பியைக் கண்டிக்க முடியவில்லை. ஜெயலலிதா ராமாவரத்தை விட்டு வெளியேறியதும் ஜானகி தான் இனி, தனியாளாக இருக்கக் கூடாது என்பதை உணர்ந்து தன் அண்ணன் பிள்ளைகளைத் தன்னுடன் வீட்டில் வைத்து வளர்த்தார்.

ஜானகியின் சகோதரருக்கு லதா, சுதா, கீதா, பானு, ஜானகி என ஐந்து பெண் குழந்தைகள். இவர்களுக்குத்தான் எம்.ஜி.ஆர் தன் ராமாவரம் வீட்டை உயில் எழுதி வைத்தார். இவர்களுக்கென்று தனித்தனி பள்ளிக்கூடங்கள் கட்டிக்கொடுத்து அவற்றை அன்னை சத்யா அறக்கட்டளையின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவந்தார். 

இந்தப் பெண்களுடன் பிறந்த தீபன் (முதல் மரியாதை படத்தில் நடித்தவர்) ஜெயலலிதா (ராணுவ ரேக்கில்) எம்.ஜி.ஆர் உடல் வைக்கப்பட்ட இடத்திற்கு ஏறிய போது கையைப் பிடித்து கீழே இழுத்துவிட்டார். எம்.ஜி.ஆர் உயிலில் சொல்லியிருந்தபடி இப்போது ராமாவரம் தோட்டத்தில் காதுகேளாதோர் வாய்பேச இயலாதோர் பள்ளியை ஜானகியின் அண்ணன் மகள் சுதா ராஜேந்திரன் நடத்தி வருகிறார்.

இந்தியாவின் முதல் பெண் முதலமைச்சராக ஜானகி அம்மையார் தமிழகத்தை 28 நாள்கள் ஆட்சி செய்தார். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்பு முதலமைச்சரான ஜானகிக்கு ராஜீவ்காந்தியும் காங்கிரஸும் சட்டசபையில் ஆதரவு தராததால் நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்று அவர் பதவியிழந்தார். தன் பேரில் இருந்த (கட்சி அலுவலகமாக) கட்டடத்தை அதிமுக கட்சி பெயருக்கு மாற்றிக் கொடுத்தார். ஜெயலலிதா அதிமுகவின் பொதுச் செயலாளராகவும் சம்மதித்தார். அவர் இறந்ததும் அவர் உடல் ராமாவரம் தோட்டத்தில் புதைக்கப்பட்டது.

இறந்து இத்தோடு 23 ஆண்டுகள் முடிந்திருக்கும் நிலையில் ராமாவரம் தோட்டத்தில் எம்.ஜி.ஆரின் மனைவியாக அவர் செய்யத் துடித்த அத்தனை தர்மங்களுக்கும் துணை நின்றவர் ஜானகியம்மா என்பது உலகப் பிரசித்தம். ராமாவரம் தோட்டத்துக்குப் போனால் கை நனைக்காமல் திரும்ப முடியாது என்பது எம்.ஜி.ஆர் மட்டும் சம்பந்தப்பட்ட சமாச்சாரமா என்ன? கணவன் எவ்வளவு பெரிய தர்மகர்த்தாவாக  இருந்தாலும் அத்துடன் மனைவியும் மனது வைத்தால்தானே அந்த தர்மம் ஈடேறும். அப்படி ராமச்சந்திரனின் அத்தனை தர்ம செயல்களுக்கும் உறுதுணையாக நின்றவர் ஜானகி.

இன்று எம்ஜியாரால் தமிழகத்தின் பெரும்பதவியிலிருப்பவர்கள், அமைச்சர்கள், கல்வித்தந்தை என்ற பெயரில் பெரும் கோடிகளுக்கு சொந்தக்காரர்களாய் இருப்பவர்கள், சில உச்ச நட்சத்திரங்கள் அத்தனை பேருமே கருணை உள்ளம் கொண்ட ஜானகி அம்மாவால் இந்த நிலைக்கு வந்தவர்களே. முழுப்பக்க விளம்பரம் வேண்டாம். வரி விளம்பரங்கள் கூட 200, 300 ரூபாய் செல்வாகிவிடும். உங்களால் ஒரு இலவச இரங்கல் அறிக்கை கூடவா தரமுடியவில்லை. அந்த அம்மாவையே நினவில் வைத்துக்கொள்ளாத நீங்கள் ’எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்’ என்று படித்ததை மட்டும் நினவிலா வைத்திருப்பீர்கள்?