இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை இந்த ஆண்டில் கடுமையான நெருக்கடியில் சிக்கித் தவித்தது. உற்பத்திச் செலவுகள் அதிகரிப்பு, குறைவான விற்பனை, பறிபோகும் வேலைகள் போன்ற பிரச்சினைகள் ஆட்டோமொபைல் துறையில் அதிகரித்துவிட்டன. இதனால் நிறுவனங்கள் தங்களது உற்பத்தி அளவைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து வந்தன.

இதுபோன்ற சூழலில் அக்டோபர் மாதத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த கார் விற்பனை ஏற்றம் கண்டுள்ளது. கார் உற்பத்தியில் இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனமான மாருதி சுஸுகி மொத்தம் 1,39,121 கார்களை அக்டோபர் மாதத்தில் விற்பனை செய்துள்ளது. இது 2018ஆம் ஆண்டின் அக்டோபர் மாத விற்பனையை விட 2.3 சதவீதம் அதிகமாகும்.

மாருதி சுஸுகி தவிர்த்து மற்ற நிறுவனங்கள் கார் விற்பனையில் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. ஹூண்டாய் நிறுவனம் 3.8 சதவீத வீழ்ச்சியுடன் 50,010 கார்களை விற்பனை செய்துள்ளது. 2018 அக்டோபரில் 52,001 கார்களை இந்நிறுவனம் விற்பனை செய்திருந்தது. மகிந்திரா நிறுவனத்தின் வாகன விற்பனை 23 சதவீதம் குறைந்துள்ளது. 18,460 கார்களை மட்டுமே அந்நிறுவனம் விற்பனை செய்திருக்கிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 13,169 கார்களையும், டொயோடா நிறுவனம் 11,866 கார்களையும், ஹோண்டா நிறுவனம் 10,010 கார்களையும் விற்பனை செய்திருக்கின்றன. இவற்றின் விற்பனை எண்ணிக்கை 2018 அக்டோபர் மாதத்தை விடக் குறைவுதான்.

நவராத்திரி முதல் தீபாவளி வரையிலான 45 நாள் பண்டிகை சீசனில் இந்தியாவின் ஒட்டுமொத்த கார் விற்பனை 25 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. மற்ற நிறுவனங்கள் வீழ்ச்சியைச் சந்தித்திருந்தாலும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் விற்பனை அதிகமாக இருந்ததால் ஒட்டுமொத்த விற்பனை அதிகரித்துள்ளதாக இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மொத்தம் 2,84,487 கார்கள் அக்டோபர் மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.