டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் EV மாடல் இந்திய விற்பனையில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் EV அந்நிறுவனத்தின் எலெக்சட்ரிக் கார் விற்பனையை தொடர்ந்து அதிகப்படுத்தி வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நெக்சான் EV மாடல் விற்பனையில் இதுவரை 13,500 யூனிட்களை கடந்துள்ளது. இந்திய சந்தையின் எலெக்ட்ரிக் கார் விற்பனையில் பயணிகள் வாகனங்கள் பிரிவில் அதிகம் விற்பனையாகும் மாடலாக நெக்சான் EV இருக்கிறது.

நெக்சான் EV மாடலில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 30.2 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கி இருக்கிறது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 312 கிலோமீட்டர் வரை செல்ல முடியும். இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 9.14 நொடிகளில் எட்டி விடும். இதில் வழங்கப்பட்டு இருக்கும் மோட்டார் 127 பி.ஹெச்.பி. திறன், 245 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் நெக்சான் EV மாடல் இந்திய விற்பனையில் 10 ஆயிரம் யூனிட்களை கடந்தது. இந்திய எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பயணிகள் வாகன பிரிவில் 70 சதவீதத்திற்கும் அதிக பங்குகளை கொண்டிருக்கிறது. 

சமீபத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நெக்சான் EV மாடலின் டார்க் எடிஷனை நெக்சான் டார்க் பெயரில் அறிமுகம் செய்தது. டார்க் எடிஷன் தவிர நெக்சான் EV மாடல் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்திய சந்தையில் நெக்சான் EV மாடலின் விலை ரூ. 14.29 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 16.90 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்->ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

டாடா நெக்சான் EV மாடலை டி.சி. ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் சார்ஜ் செய்யும் போது ஒரு மணி நேரத்தில் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்திட முடியும். எனினும், வழக்கமான சார்ஜர் பயன்படுத்தும் போது 10 சதவீதத்தில் இருந்து 90 சதவீதம் வரை சார்ஜ் ஆக 8.30 மணி நேரம் ஆகும்.

கடந்த சில மாதங்களாக புதிய நெக்சான் EV மாடல் சாலையில் சோதனை செய்யப்படும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வந்தன. அந்த வரிசையில் தற்போது வெளியாகி இருக்கும் ஸ்பை படங்களில் நெக்சான் EV பின்புறத்தில் டிஸ்க் பிரேக் மற்றும் புதிய அலாய் வீல்களை கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.

அதன்படி டாடா மோட்டார்ஸ் தனது நெக்சான் EV-இன் புது வேரியண்டை உருவாக்கி வருவது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. இந்த மாடலில் சற்றே பெரிய பேட்டரி பேக் மற்றும் அதிக திறன் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். டெல்லி ஆர்.டி.ஒ. தரவுகளின் படி இந்த எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடலில் 136 பி.எஸ். எலெக்ட்ரிக் மோட்டார், 40 கிலோவாட் ஹவர் பேட்டரி யூனிட் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.