மத்திய பட்ஜெட் 2022 உரையில் ஆட்டோமொபைல் துறை சார்ந்து வெளியான முக்கிய அறிவிப்புகள் பற்றி பார்ப்போம்.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட் 2022 இன்று தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையில் இந்திய ஆட்டோமொபைல் சந்தையை பலப்படுத்த சில அறிவிப்புகள் இடம்பெற்று இருந்தது. எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் பேட்டரி மாற்றும் மையங்களை அமைப்பது, ஆட்டோ உபகரணங்கள் வளர்ச்சிக்கான திட்டமிடல் உள்ளிட்டவை முக்கிய அறிவிப்புகளாக பார்க்கப்படுகின்றன.
பட்ஜெட்டில் இந்திய ஆட்டோ துறை சார்ந்து வெளியான முக்கிய அறிவிப்புகளை பார்ப்போம்.

பேட்டரி மாற்று மையங்கள்
பட்ஜெட் 2022 அறிவிப்பில் எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாட்டை ஊக்குவிக்க பேட்டரி மாற்று மையங்கள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இது பயன்பாட்டுக்கு வரும் போது இந்தியாவில் உள்ள எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்கள், எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் உள்கட்டமைப்பு சார்ந்த நிறுவனங்கள் நேரடியாக பயன்பெற முடியும். இது அனைத்து விதமான எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டுக்கான வளர்ச்சிக்குமான மிக முக்கிய திட்டம் ஆகும். இந்த திட்டத்தின் கீழ் மத்திய அரசு நாடு முழுக்க பேட்டரி மாற்றும் மையங்களை அமைக்க தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்கும்.
பொது போக்குவரத்துக்கு எலெக்ட்ரிக் வாகனங்கள்
பொது போக்குவரத்துக்கு எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டை மத்திய அரசு ஊக்குவிக்கும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இது எலெக்ட்ரிக் பேருந்து மற்றும் வணிக வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு பலன் தரும். மேலும் இது உற்பத்தி நிறுவனங்களுக்கு உபகரணங்களை வழங்கும் நிறுவனங்களுக்கும் உதவியாக இருக்கும். இது குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு மட்டுமே பலன் அளிக்கும்.

வாகனங்கள் விலையில் மாற்றம் இருக்காது
ஆட்டோமொபைல் துறையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சில அறிவிப்புகள் இந்த பட்ஜெட் உரையில் இடம்பெறவில்லை. அந்த வகையில் புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவோரை ஊக்குவிக்கும் சலுகைகள், வரி விதிப்பு, இறக்குமதி வரி உள்ளிட்டவைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. மேலும் ஆட்டோமொபைல் துறையில் தொடர்ந்து அதிகரித்து வரும் உற்பத்தி செலவீனங்களை குறைக்க எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை. இதன் காரணமாக கார், பைக், ஸ்கூட்டர் போன்ற வாகனங்களின் விலை குறையாது.
பாதுகாப்பு துறையில் தனியார் நிறுவனங்கள்
இந்தியாவில் உள்ள ஆட்டோ உபகரணங்கள் உற்பத்தியாளர்களுக்கு பலன் அளிக்கும் வகையில் பாதுகாப்பு துறை ஆய்வு மற்றும் வளர்ச்சி பணிகளில் தனியார் நிறுவனங்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்படுகிறது. ஏற்கனவே டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா போன்ற நிறுவனங்கள் தங்களின் துனை பிரிவுகளை கொண்டு இந்திய ராணுவத்திற்கு வாகனங்களை உற்பத்தி செய்து கொடுக்கின்றன. இது குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

உள்கட்டமைப்புகளுக்கு ரூ. 20 ஆயிரம் கோடி
2022-2023 ஆண்டு தேசிய நெடுஞ்சாலைகளை 25 ஆயிரம் கிலோமீட்டர்கள் வரை நீட்டிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று காலக்கட்டத்தில் வணிக வாகனங்களை சார்ந்து இயங்கும் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற நேரத்தில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால், வணிக வாகனங்களுக்கான தேவை அதிகரிக்கும். இது வணிக வாகனங்களை சார்ந்து இயங்கும் நிறுவனங்களுக்கு பலன் அளிக்கும்.
