இந்தியாவில் சிப்செட்கள் அடங்கிய இ பாஸ்போர்ட்கள் பயன்பாட்டுக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக நிதி அமைச்சர் அறிவிப்பு.

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் எம்பெட் செய்யப்பட்ட சிப்செட்கள் அடங்கிய இ பாஸ்போர்ட்கள் இந்தியாவில் 2022-2023 வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என பட்ஜெட் உரையில் அறிவித்தார். முன்னதாக மத்திய வெளியுறவு துறை அமைச்சகத்தின் செயலாளர் சஞ்சய் பட்டாச்சாரியா இந்தியாவில் விரைவில் இ பாஸ்போர்ட்கள் அறிமுகம் செய்யப்படும் என தனது அதிகாரப்பூர் டுவிட்டர் பதிவில் தெரிவித்து இருந்தார்.

இ பாஸ்போர்ட்களில் 'செக்யூர் பயோமெட்ரிக் டேட்டா' இடம்பெற்று இருக்கும். இந்த இ பாஸ்போர்ட்கள் சர்வதேச வான் போக்குவரத்து அமைப்பின் தரத்திற்கு ஏற்ப உருவாக்கப்பட இருக்கிறது. தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் பாஸ்போர்ட்களை போன்றே இ பாஸ்போர்ட்களும் இருக்கும். எனினும், இவற்றில் அதிநவீன தொழில்நுட்பத்தால் ஆன எம்பெட் செய்யப்பட்ட சிப்செட்கள் இருக்கும். 

மிக முக்கிய தகவல்கள் சேமிக்கப்பட்ட மைக்ரோசிப்கள் பாஸ்போர்ட்களில் அச்சிடப்பட்டு இருக்கும். தற்போது நாடு முழுக்க பயனர்களுக்கு அச்சிடப்பட்ட பாஸ்போர்ட்களே இந்தியாவில் வழங்கப்பட்டு வருகிறது. எனினும், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில் இ பாஸ்போர்ட்கள் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்திய இ பாஸ்போர்ட்கள் நாஷிக்கில் உள்ள இந்திய செக்யூரிட்டி பிரஸ்-இல் உருவாக்கப்பட இருக்கிறது. தற்போது மைக்ரோசிப்கள் பற்றிய பேச்சுவார்த்தை இந்திய செக்யூரிட்டி பிரஸ் உடன் நடைபெற்று வருகிறது. 

வழக்கமான பாஸ்போர்ட்களை விட இ பாஸ்போர்ட் அதிக பாதுகாப்பானது ஆகும். இதில் எலெக்டிரானிக் சிப் இருக்கும் என்பதால், அச்சிடப்பட்ட பாஸ்போர்டில் உள்ள விவரங்களே இதிலும் இடம்பெற்று இருக்கும். இதில் பாஸ்போர்ட் வைத்திருப்பவரின் பெயர், பிறந்த தேதி மற்றும் இதர விவரங்கள் இடம்பெற்று இருக்கும். இந்த பாஸ்போர்ட்கள் இருந்தால், விமான நிலையங்களில் நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை. 

நொடிகளில் ஸ்கேன் செய்துவிட முடியும் என்பதால், உடனடியாக வெரிஃபிகேஷன் வழிமுறையை நிறைவு செய்திட முடியும். தற்போது உலகம் முழுக்க 120 நாடுகளில் இ பாஸ்போர்ட் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. 

இ பாஸ்போர்டில் உள்ள சிப் 64 கிலோபைட் மெமரி மற்றும் செவ்வக வடிவம் கொண்ட ஆண்டெனா கொண்டிருக்கும். ஆரம்பத்தில் இந்த சிப்கள் அதிகபட்சமாக 30 சர்வதேச பயணங்கள் பற்றிய விவரங்களை சேமித்து வைத்துக் கொள்ளும். பின் பாஸ்போர்ட் வைத்திருப்பவரின் புகைப்படம் மற்றும் பயோமெட்ரிக் விவரங்கள் சேமிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எவரேனும் இதனை மாற்ற நினைத்தால், பாஸ்போர்ட் செயலிழந்து போகும்.