Russia Ukraine War: போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்யாவுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக தெரிவித்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, நேட்டோவில் உறுப்பினராக சேர்த்துக்கொள்ளுமாறு இனி வலியுறுத்த போவதில்லை என்று கூறியுள்ளார்.
உக்ரைன், ரஷ்யா இடையிலான போர் 12 நாட்களை எட்டியுள்ளது. இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை. உக்ரைனில் உள்ள ராணுவ தளங்களை அழிக்கும் முயற்சியில் ரஷியா ஈடுபட்டு வருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களாக கீவ், கார்கீவ், கிமி உள்ள இடங்களில் தொடர்ந்து குண்டுமழை பொழிந்து வருகிறது. அங்கு சிக்கியுள்ள மக்கள் அதிகளவில் வெளியேறி வருகின்றனர். அதேநேரம், தலைநகர் கீவின் புறநகரான புச்சாவில் ஏவுகணைகளும், ராக்கெட்டுகளும் மழையாக பொழிந்தவண்ணம் உள்ளன.
இந்நிலையில், ரஷ்யா 17 நாடுகளை நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து அதிரடியாக நீக்கி உத்தரவிட்டது.இதுதொடர்பாக ரஷ்ய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் உக்ரைன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், சுவிட்சர்லாந்து, அல்பேனியா, ஐஸ்லாந்து, மொனாக்கோ, நார்வே உள்ளிட்ட 17 நாடுகளை நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கும் விவகாரத்தில் ஐ.நா.வில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களுக்கு இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட சில நாடுகளை தவிர ஏனைய ஐரோப்பிய நாடுகள் போன்றவை ரஷிய எதிர்ப்பு நிலையை கடைப்பிடித்ததால் இந்த நடவடிக்கையை ரஷ்யா எடுத்துள்ளதாக தெரிகிறது.
கிழக்கு உக்ரைனின் பகுதியான சுமி நகரை சுற்றி வளைத்து ரஷ்ய ராணுவம் அதிரடி தாக்குதலை தொடந்து நடத்தி வருகிறது. இங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ஒத்துழைப்பு வழங்குமாறு ரஷ்யா- உக்ரைன் இரு நாட்டு அதிபர்களுடன் இந்திய பிரதமர் பேசினார். இந்நிலையில் கிமியிலிருந்து பொதுமக்கள் வெளியேற அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் மூலம் சுமியில் இருந்து பேருந்துகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.
இதனிடையே தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, உக்ரைனை நேட்டோவில் இணைந்து கொள்ள அந்த அமைப்பில் உள்ள நாடுகள் முனைப்பு காட்டவில்லை. மேலும் ரஷ்யாவுடனான போர் மற்றும் பல்வேறு சர்ச்சைகளை கருத்தில் கொண்டு தான் நேட்டோ அமைப்பு உக்ரனை சேர்த்துக்கொள்ள அஞ்சுவதாக அவர் தெரிவித்தார்.
மேலும் நேட்டோவில் அமைப்பிலிருந்து எதையும் கெஞ்சியோ, தானமாகவோ பெறும் நாடாக உக்ரைன் இருக்கக்கூடாது. மேலும் அப்படிப்பட்ட நாட்டின் தலைவராக நான் இருக்க விரும்பவில்லை என்று அவர் கூறினார். மேலும் தன்னாட்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட டோனஸ்க் மற்றும் லூகான்ஸ்க் பகுதிகள் குறித்து ரஷ்யாவுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுப்பட விரும்புவதாக அவர் கூறினார்.
தனக்கு வாக்களித்த மக்கள் சரணடைய தயாராக இல்லை என குறிப்பிட்ட செலன்ஸ்கி, ரஷ்யாவால் சுதந்திரமான பகுதிகள் என அறிவிக்கப்பட்ட உக்ரைனின் அங்கமாக இருந்த கிரீமியா மற்றும் டான்பாஸின் எதிர்காலம் குறித்து ரஷ்யாவுடன் விவாதிப்போம் எனவும் கூறினார்.மேலும் உக்ரைனின் ஒரு பகுதியாக இருக்கும் மக்கள் தனி நாடாக எப்படி வாழ முடியும் என்று அவர் கேள்வியெழுப்பினார்.