Sep 10, 2022, 2:22 PM IST
பிரிட்டன் ராணி எலிசபெத் உடல்நலக்குறைவு காரணமாக வியாழக்கிழமை இரவு காலாமானார். இவருக்கு வயது 96. இவரை அடுத்து இவரது மூத்த மகன் சார்ல்ஸ் பிரிட்டன் நாட்டின் மன்னராகிறார். இவரது மனைவி கமிலா ராணியாகிறார். ராணி எலிசபெத் உடல் ஸ்காட்லாந்தில் இருக்கும் பல்மோரல் அரண்மனையில் வைக்கப்பட்டு உள்ளது. அங்கு சென்று இருந்த சார்லஸ் நேற்று லண்டனில் இருக்கும் பக்கிங்காம் அரண்மனைக்கு மனைவியுடன் வந்தார்.
அங்கு அஞ்சலி செலுத்துவதற்காக திரண்டு இருந்த மக்களிடம் அன்பை பகிர்ந்து கொண்டார். கூடியிருந்தவர்கள் 'மன்னர் எங்களை காப்பாற்றினார்' என்று கோஷம் எழுப்பினர். சிலர் சார்லஸ்சுக்கு முத்தம் கொடுத்தனர். மக்கள் காட்டிய அன்புக்கு சார்லஸ்சும் நன்றி தெரிவித்துக் கொண்டார். பக்கிங்காம் அரண்மனையில் அரை கம்பத்தில் கொடி பறக்கிறது. அதிகாரபூர்வமாக இன்று மன்னர் பொறுப்புகளை சார்லஸ் ஏற்கிறார். பத்து நாள் துக்க தினம் அனுஷ்டித்த பின்னர் மன்னராக சார்லஸ் முடிசூடுவார் என்று தெரிய வந்துள்ளது.