விடிய விடிய விடாத மழை.. 22 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை..!

Aug 17, 2019, 12:13 PM IST

தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் அவ்வப்போது கனமழை பெய்வதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதே போல் தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த ஒரு வாரமாக தென் மாவட்டங்களில் மழைபெய்து வருகிறது.


சென்னையை பொருத்தவரை நேற்று இரவில் இருந்தே தொடர்ந்து மழை பெய்து கொண்டு வருகிறது. காலை 6 மணி முதலே வானம் இருண்ட நிலையிலேயே காணப்படுகிறது. நேற்று இரவு முதலே பெய்து வரும் தொடர் மழை காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலைக்கு மாறி உள்ளது. இதனால் சென்னை ஊட்டியாக மாறிவிட்டதாக மக்கள் உற்சாகமடைந்துள்ளனர்

இதே போல் காஞ்சிபுரம் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நள்ளிரவு தொடங்கி இன்று காலை வரை மழை பெய்ததது. வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் நள்ளிரவு முதல் மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக வேலூர் மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து கனமழை பெய்வதால் விடுமுறை விடப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை பொறுத்தவரை இன்று சென்னை, திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, சேலம், நெல்லை, மதுரை, காஞ்சிபுரம், திண்டுக்கல், தர்மபுரி, தஞ்சாவூர், நாமக்கல் உட்பட 22 மாவட்டங்களில் நாளை இரவு வரை மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.