Sep 19, 2022, 12:57 PM IST
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட விளந்தை ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு உயர்கல்வித்துறை அமைச்சரும் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான க. பொன்முடி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது மருத்துவமனையில் அத்தியாவசிய மருந்து பொருட்கள் வைப்பதற்கு குளிர்சாதன பெட்டி பழுதடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனை அடுத்து அந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தமது சொந்த பணத்தின் மூலம் உடனடியாக புதியதாக குளிர்சாதன பெட்டியை வழங்கினார். பின்னர் பிரசவ வார்டு உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பிரிவுகளுக்கு சென்று பார்வையிட்டார்.
இந்த நிகழ்வின்போது சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி, திருக்கோவிலூர் நகர மன்ற தலைவர் முருகன், மாவட்ட குழு தலைவர் ஜெயச்சந்திரன், துணைத் தலைவர் தங்கம், முன்னாள் சேர்மன் ஜனகராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புஷ்பராஜ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.