காட்டு காட்டுனு காட்டிய மழை.. வெள்ளத்தில் மிதக்கும் சென்னை..! மீனவர்களுக்கு எச்சரிக்கை வீடியோ

Sep 19, 2019, 11:59 AM IST

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், , சென்னையின் பல்வேறு இடங்களில் விடிய விடிய கனமழை பெய்தது.

நேற்று நள்ளிரவு திடீரென காற்று, இடி, மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது. நேரம் செல்ல, செல்ல மழை மிகக் கடுமையாக பெய்யத் தொடங்கியது. சென்னை மற்றும் அதன் புற நகர் பகுதிகளில் இரவு முதல் விடிய விடிய கன மழை கொட்டித்தீர்த்தது, ஆனால் தூறல் நீடிக்கிறது.  
இரவு முழுவதும் மழை பெய்ததால் சென்னையில் சாலைகள் வெள்ளக்கடாக காட்சியளிக்கிறது. சென்னையில் தாழ்வான பகுதிகளான வட சென்னையின்  வியாசர்பாடி, தண்டையார் பேட்டை, தென் சென்னையில் மடிப்பாக்கம், வேளச்சேரி, புற நகர் பகுதிகளான் தாம்பரம், பல்லாவரம் போன்ற பகுதிகளில் மழைநீர் குளம் போல தேங்கியுள்ளது. இதேபோல் சென்னையை அடுத்துள்ள மாதவரம், புழல், செங்குன்றம், சோழவரம், பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதே போல் கடலூர் மாவட்டத்திலும் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. மதுரை, விருதுநகர், தேனி போன்ற மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்தது 

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதுபோல்  வடதமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடற்கரை பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.