Mar 15, 2024, 10:18 PM IST
உடுமலையிலிருந்து பழனி கொழுமம் வழியாக செல்லும் சாலையில் குதிரையாறு செக் போஸ்ட் உள்ளது. இப்பகுதியில் குதிரை யாறு செல்கிறது, பாலாற்றில் இருந்து வரும் தண்ணீர் குதிரை ஆற்றில் கலந்து அமராவதி ஆற்றில் இணைகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு நள்ளிரவு ராட்சச முதலை ஒன்று சாலையை கடந்து மறு பகுதிக்கு சென்றுள்ளது.
இதைக் கண்ட வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். 13 அடி நீளம் கொண்ட இந்த முதலை சுமார் 500 கிலோ எடை இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கோடை வெயில் காரணமாக நீர்நிலைகளில் தற்போது தண்ணீர் குறைந்து வருகிறது இதனால் ஆற்றில் இருந்து வெளியேறிய முதலை சாலையை கடந்து சென்றுள்ளது.
முதலை நடமாட்டம் காரணமாக அப் பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தற்போது முதலை எங்கு பதுங்கி உள்ளது என்பது தெரியவில்லை. அதனை கண்டுபிடித்து அமராவதி முதலைப் பண்ணையில் விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அமராவதி அணைக்கட்டு அருகே வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முதலை பண்ணையில் நூற்றுக்கும் மேற்பட்ட முதலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
எனவே வனத்துறை முதலையை பிடித்தால் முதலைப் பண்ணையில் கொண்டு சென்று விட வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முதலை சாலையை கடந்து செல்வதை வாகனத்தில் சென்ற ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.